`ஒரேஒரு மயக்கவியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர்’ : 150-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடத் தயாராகும் ஊட்டி மருத்துவமனையின் நிலை

விரைவில் 150-வது ஆண்டுவிழாவைக் கொண்டாட உள்ள ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் மயக்கவியல் ஆகிய துறைகளில் ஒரேஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில்,  குன்னூர் 10, கூடலூர் 10, கோத்தகிரி 10, மஞ்சூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் மாதத்திற்கு 4 என்ற எண்ணிக்கையிலும், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மாதத்திற்கு சுமார் 150 என்ற எண்ணிக்கையிலும் குழந்தைகள் பிறக்கின்றன. அது மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதிலும் உள்ள 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் சுமார் 100 முதல் 150 குழந்தைகள் பிறக்கின்றன. 

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமருத்துவம், டயாலிசிஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, காது, மூக்கு மற்றும் தொண்டை, மனநல மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, ரத்தப் பரிசோதனைப் பிரிவு, எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேனிங் உட்பட பல பிரிவுகளில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன. அதேபோல, மாவட்டத்தில் 5 தாலுகா அரசு தலைமை மருத்துவமனைகளும், 2 மருந்தகங்களும் செயல்பட்டுவருகின்றன.

64 மருத்துவர்கள் பணியாற்றவேண்டிய ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், தற்போது 43 மருத்துவர்கள்தான் பணியாற்றி வருகிறார்கள். மலைப்பிரதேசம் என்ற ஒரே காரணத்தால், மருத்துவர்கள் இங்கு பணியாற்ற தயக்கம்காட்டுகின்றனர். 7 மகப்பேறு நிபுணர்கள் பணியாற்றவேண்டிய இடத்தில் ஒரே ஒரு மகப்பேறு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதால், சுழற்சி முறையில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலிருந்து மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், டெபுடேஷன் முறையில் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 5 மயக்க மருந்து நிபுணர்கள் பணியாற்றவேண்டிய இடத்தில், கடந்த சில ஆண்டுகளாக, ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் மட்டுமே பணியில் உள்ளார். ஏதேனும் காரணத்திற்காக ஆவர் விடுப்பு எடுக்கும் பட்சத்தில், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க, தனியார் மருத்துவமனையிலிருந்து மருத்துவ நிபுணர்கள்,
அல்லது ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். ஒரு நோயாளிக்கு ரூ.3,000 வீதம் அந்த நிபுணர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் இல்லாத பட்சத்தில் நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களும், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண்களும்தான் இந்த இரு நிபுணர்கள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

இதுகுறித்து நீலகிரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ரகு கூறுகையில்,“ ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவப் பணிகள்துறை இன்பசேகரன் ஆகியயோர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அல்லது மாநிலங்களைச் சேர்ந்த மயக்க மருந்து மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் என்னை நேரில் சந்தித்து பணி வேண்டும் எனக் கேட்டால், உடனடியாக நேர்காணல் நடத்தி பணி வழங்க, சிறப்பு அனுமதியளித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே இத்துறைகளில் நிபுணர்களாகப் பணியாற்றி, விடைபெற்றவர்களுக்கும் ‘ரீ அப்பாயின்மென்ட்’ வழங்கவும் தயாராக உள்ளோம். அவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஊதியம் நிர்ணயம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

ஊட்டி அரசு மருத்துவமனையில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 சிசேரியன், குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை மற்றும் இதர அறுவைசிகிச்சைகள் நடைபெறும். எனவே, இங்கு பணியில் உள்ள மயக்க மருந்து நிபுணர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேநேரம், மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மாதத்திற்கு ஒரு முறை குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை முகாம் நடக்கிறது. அதைத் தவறவிடுபவர்கள், ஊட்டி அல்லது குன்னூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டியதாகிறது. விரைவில், நிபுணர்களுக்கான பணியிடங்கள் நிரம்பும் என எதிர்ப்பார்க்கிறோம். மருத்துவமனையின் 150-ம் ஆண்டு விழா, வரும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது. 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ள ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!