வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:39 (17/03/2018)

''எம்.ஜி.ஆரோடு ஓ.பி.எஸ் அல்லது ஈ.பி.எஸ் இருக்கிற போட்டோவைக் காட்டுங்கள் பார்க்கலாம்?'' - சவால் விடும் கே.சி.பழனிசாமி

அ.தி.மு.க கட்சியிலியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி

த்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருக்கும் 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்' , பி.ஜே.பி அரசை கவிழ்க்கப்போகிறதோ... இல்லையோ... அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை கட்சியைவிட்டே கவிழ்த்துவிட்டதுதான் பரிதாபம்!

நேற்றைய தினம், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கே.சி.பழனிசாமி, 'நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து அ.தி.மு.க வாக்களிக்கும்' என்று சொல்லிவைக்க... 'கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கே.சி.பழனிசாமியை கழற்றி விட்டுவிட்டது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.

கட்சித் தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுகுறித்து ஆவேசமானக் கருத்துகளைக் கொட்டிவரும் கே.சி.பழனிசாமியிடம் பேசினோம்.....

''கட்சிக் கொள்கைக்கு எதிராக அப்படி என்னதான் பேசிவிட்டீர்கள்?''

''ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பி.ஜே.பி அரசைக் கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ராஜினாமா செய்யப்போவதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறாரே... இதேபோல, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்களா?' என்றக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக, 'மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?' என்ற கேள்வியும் வைக்கப்பட்டது. 

இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, 'சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதால், நமக்கு எந்தவிதப் பலனும் கிடைக்காது. ஏனெனில், எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டால், ஆளுநர் ஆட்சிதான் அமல்படுத்தப்படும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், மத்திய அரசுக்கு எதிராக ஆளுநரே அவமதிப்பு வழக்கு ஏதும் தொடுப்பாரா என்ன... எந்த வழக்கும் போட மாட்டார். 

எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லையெனில், மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கலாம்' என்றக் கருத்தைச் சொன்னேன். இதில், எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறினேன் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.''

''அ.தி.மு.க நிலைப்பாடு என்ன என்பதை நீங்களாகவே முடிவெடுத்துப் பேசுவது சரிதானா?''

''அ.தி.மு.க-வின் கொள்கை என்ன... ஜெயலலிதா தனது உயிரைப் பணயம் வைத்து கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தது எதற்காக... காவிரிப் பிரச்னைக்காகத்தானே..?

வாஜ்பாய் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை அ.தி.மு.க வாபஸ் வாங்குவதாக அறிவித்தபோதும், 'காவிரிப் பிரச்னையை'த் தானே ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருந்தார். ஆக, நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது..?''

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.

''நீங்கள் தன்னிச்சையாக அப்படியொரு கருத்தைத் தெரிவித்தது தவறு இல்லையா?''

''என்னுடைய கருத்து தவறென்றால், அதை என்னிடமே சுட்டிக்காட்டியிருக்கலாம்; அல்லது என்னைக் கூப்பிட்டு விவாதித்திருக்கலாம். 'கொஞ்சம் திருத்திக்கொள்ளுங்கள்' என்று தொலைபேசியிலாவது கேட்டிருக்கலாம். ஆனால், இதில் எதையுமே கடைப்பிடிக்காது, ஆணவத்தோடு அவர்களாகவே முடிவெடுத்து, தடாலடியாக கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சியின் நிலைப்பாடு இதுதான் என்று முன்கூட்டியே எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருட காலத்தில், கட்சியின் நிலைப்பாடுகுறித்து யாரும் என்னிடம் எதுவும் பேசியதில்லை. 

நேற்றைய தினம் நடைபெற்ற பட்ஜெட் உரையின்போதுகூட, 'கழகங்களின் ஆட்சியில் தமிழகம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது' என்பதையெல்லாம் ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார். கூடவே, 'தமிழகத்துக்கு நிதியைத் தராமல் மத்திய அரசு வஞ்சித்துவருவதாக'வும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பேச்சின் அர்த்தம் என்ன.... 'தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க, மத்திய அரசை எதிர்த்து செயல்படுவோம் என்பதுதானே?' 

இந்தப் பேச்சுகுறித்தும், 'இந்த நிலைப்பாட்டுக்கு முதல்வரும் அனுமதி அளித்திருக்கிறார்' என்பதையும்கூட அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆக, இதனையெல்லாம் உதாரணமாக வைத்துத்தான் 'நான் இந்தக் கருத்தைச் சொல்கிறேன்' என்ற எனது தரப்பையும் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.''

''உங்கள் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமை ஏற்கவில்லையா?''

''ஜனநாயக முறையை மதிக்கிறவர்களாக இருந்தால், என்னிடம் விளக்கம் கேட்டிருப்பார்கள். கட்சியிலிருந்து நான் நீக்கப்பட்டிருக்கிறேன் என்ற செய்தியையே தொலைக்காட்சி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது, எந்த இடத்தில் அப்படியொரு விளக்கத்தை நான் சொல்லவேண்டியதாக இருந்தது என்பதை முழு நிகழ்ச்சியையும் பொறுமையாகப் பார்க்கும்போதுதான் புரியும்.''

''ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். குறித்து அதிரடித் தகவல்களை வெளியிடப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்களே... என்ன அது?''

''தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு பதிலை வாங்கி வைத்திருக்கிறேன். அதாவது, கழகத்தினுடைய சட்ட விதிகள் திருத்தப்பட்டதை இன்றைய தினம் வரையிலும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கும்பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும் கிடையாது; எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரும் கிடையாது என்பதுதான் உண்மை.

கட்சியின் கோட்பாடுகளை முடிவுசெய்வதற்கு 'உயர் மட்டக்குழு' என்று  அறிவித்தார்கள். ஆனால், இன்றைய தேதி வரை அப்படி ஒரு குழுவே அமைக்கப்படவில்லையே.... அப்படியென்றால், கட்சியின் கொள்கைகளை முடிவுபண்ணுவது யார்? ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் மட்டுமே அ.தி.மு.க அல்ல. இவர்கள் இருவருமே எனக்குப் பிறகு இந்தக் கட்சிக்கு வந்தவர்கள்!

இவர்களுக்கு, பி.ஜே.பி-யிடமிருந்து என்ன அழுத்தம் வந்ததோ எனக்குத் தெரியவில்லை. காலையில் நான் கொடுத்த பேட்டிக்கு சாயங்காலத்துக்குள் என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமலே கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள்.''

மோடி

''பி.ஜே.பி-யினரின் மிரட்டலுக்குப் பயந்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இப்படியொரு முடிவு எடுத்துள்ளதாகச் சொல்கிறீர்களா?''

''ஆமாம்.... பல்வேறு கொள்ளை, ஊழல் வழக்குகள் ஓ.பி.எஸ் மீது இருப்பதால், அவருக்கு வேண்டுமானால் மோடியைக் கண்டு பயமிருக்கலாம். ஆனால், எனக்கு எந்தப் பயமும் கிடையாது. 

1972 -லேயே கட்சிக்கு அறிமுகமானவன் நான். மற்றவர்களைப் போல இடைச்செருகலாக இந்தக் கட்சிக்கு வந்தவனல்ல. 1982-ல் கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி வகித்தேன். 1984-ல் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நானும் எம்.எல்.ஏ-வாக சட்டசபை சென்றவன். அப்போதைய இளம்வயது எம்.எல்.ஏ-வும் நான்தான்! 1989-ல் நான், திருச்செங்கோடு எம்.பி! இந்தியாவிலேயே அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில், இரண்டாவது இடத்தில் ஜெயித்துவந்தவன். 

ஆனால், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் எல்லாம் கட்சியில் வந்து சேர்ந்தது எப்போது...? ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரிடமுமே நான் கேட்கிறேன், 'எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நிற்கிற மாதிரி ஒரு போட்டோவைக் காட்டுங்கள் பார்க்கலாம்?' 

இன்றைக்கு சசிகலாவை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், முதன்முதலில் உணர்வுப்பூர்வமாக  நான் சசிகலாவை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடுத்த நேரத்தில், கையைக் கட்டிக்கொண்டு சசிகலா காலில் விழுந்தவர்தான் இந்த ஓ.பி.எஸ்!''

''கட்சியிலிருந்து தடாலடியாக நீங்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு வேறு ஏதேனும் பின்னணி இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?''

''பி.ஜே.பி-யினரின் அழுத்தத்தைத் தவிர இதில் வேறு எந்தப் பின்னணியும் இல்லை. பி.ஜே.பி-க்கு இவர்கள் காட்டவேண்டிய விசுவாசத்துக்காக என்னைப் பலியாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்!''

''அடுத்தகட்டமாக உங்களது நடவடிக்கை என்னவாக இருக்கும்?''

''கட்சியில் ஏற்கெனவே இதுபோன்ற அதிருப்தி மனநிலையில் உள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களோடு கலந்து ஆலோசித்த பிறகு, அதற்குத் தகுந்தாற்போல எனது மேல் நடவடிக்கைகள் இருக்கும். அது எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை இப்போதே சொல்லமுடியாது.''


டிரெண்டிங் @ விகடன்