"லஞ்சம் கொடுத்துதான் வேலை வாங்கணும்னா.. அது வேணாம்" ஒரு நிஜ 'இந்தியன் தாத்தா' கதை | A story of martyr who refused to give bribe for government

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:44 (17/03/2018)

"லஞ்சம் கொடுத்துதான் வேலை வாங்கணும்னா.. அது வேணாம்" ஒரு நிஜ 'இந்தியன் தாத்தா' கதை

தியாகி, martyr

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகி​களை நாடு எந்த அளவுக்கு மதிக்கிறது, மரியாதை தருகிறது என்பதற்குத் தயங்காமல் தியாகி காளியப்பன் அவர்களின் குடும்பத்தினை அடையாளம் காட்டலாம். அவரது குடும்பத்தை பற்றி காண்பதற்கு முன்பு தியாகி காளியப்பனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.. 

"பர்மாவின் தலைநகர் ரங்கூனில் பிறந்தவர்தான் இந்தக் காளியப்பன். இவரது மூதாதையர்கள் தமிழகத்திலுள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயதிலேயே பர்மாவுக்குக் குடிபெயர்ந்தது காளியப்பனின் குடும்பம். தன் அப்பாவினுடைய கமிஷன் மண்டியில் காளியப்பனுக்கு வேலை. சாதாரணமாக இருந்த காளியப்பனின் வாழ்க்கையை, பர்மாவுக்கு வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாற்றியமைத்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் அது. எனவே, போரில் கவனம் செலுத்தி வந்த நேதாஜி, தனது இந்திய தேசிய படைக்கு வீரர்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்படி ரங்கூனில், வீரர்களை திரட்டுவதற்காக நேதாஜி நடத்திய பொதுக்கூட்டத்தில்தான் அவரை பார்த்திருக்கிறார் காளியப்பன்.
நேதாஜியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காளியப்பன் தன் வீட்டைவிட்டு வெளியேறி தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அதனையடுத்து, 1943ம் ஆண்டு ரங்கூன் கவுசலாவில் நேதாஜி தலைமையில் செயல்பட்ட இந்திய தேசியப் படையில் ராணுவ வீரராக தன்னை இணைத்துக்கொண்டார். நீண்ட பயிற்சிக்குப் பின்னர், பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டார். 

இந்நிலையில், இரண்டாம் உலகப்போரில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்த பிரிட்டிஷ் படை, தங்களை எதிர்த்து போரிட்டவர்களைத் தேடிக்கண்டுபிடித்து அழிப்பதிலும், விசாரணையே இல்லாமல் அவர்களைச் சிறையில் அடைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தது. சிங்கப்பூர் மற்றும் பர்மாவின் தேசியப் படையில் பிரிட்டிஷ்க்கு எதிராகப் போரிட்ட பெரும்பாலான வீரர்கள் கைதுக்கு ஆளாகும்போது, காளியப்பனும் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட அவருக்கு, 1964ல் வீரம்மாளுடன் திருமணம் நடந்தது. மீண்டும் 'கமிஷன் கடை' காளியப்பன் ஆனார். இந்நிலையில், பர்மாவில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் தாய்நாடு திரும்ப, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருச்சிக்கு வந்தார் காளிப்பன். சிறிய அளவிலான வாடகை வீட்டில் வசித்து வந்தார். வருமானத்திற்காக திருச்சி மார்க்கெட்டில் உள்ள கமிஷன் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்தார். முதுமையினால் உடல் தளர்ந்து போன அவர் கடந்த 2009ம் ஆண்டு மரணமடைந்தார்.

வீரம்மாள்

தியாகி காளியப்பன் தொடர்பான தகவல் கிடைத்ததும் அவரின் குடும்பம் தொடர்பா விசாரித்தோம். காளியப்பனின் மனைவி மற்றும் மகன்கள் திருச்சி வரகனேரியில் வசிப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. மேலும், 'அவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத கூரை வீட்டில் வசித்து வருவதோடு, வருமானத்துக்கு வழியில்லாமல் வறுமையில் வாடி வருகிறார்கள்' என்ற தகவலால் அவர்களைச் சந்திக்க நேரில் சென்றோம்.. 

திருச்சியில் உள்ள நூற்றுக்கணக்கான ஒற்றைச்சந்துகளிலேயே மிகக்குறுகிய சந்தாக அதைத்தான் கூற முடியும். ஒருவர் மட்டுமே செல்ல முடிந்த அந்தச் சந்துக்குள் குடியிருக்கிறது தியாகி காளியப்பனின் குடும்பம். எந்த வசதியும் இல்லாத, 'எந்த நிலையிலும் இடிந்து விழலாம்' என எச்சரிக்கும் அந்த 10க்கு 10 அடி நீளமுள்ள கூரைக் கொட்டகை நமது மனதுக்குள் பதற்றத்தை அதிகரித்தது. நான்கு கால்களில் ஒரு காலை இழந்த அந்த ஊனமுற்ற கட்டிலில் அமர்ந்திருந்தனர் தியாகி காளியப்பனின் மனைவி வீரம்மாளும் அவரது மகன்களும். 

வீரம்மாள்

அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு மூத்த மகனான விவேகனிடம் பேசினோம். ``எங்க அய்யா கண்டிஷன்காரருங்க. எந்த விஷயமா இருந்தாலும் முகத்துக்கு நேராவே பேசிடுவாரு. பர்மாவை விட்டு திருச்சிக்கு வந்ததுக்குப் பிறகு எங்க அய்யா கொஞ்ச நாள் காய்கறி கடையில வேலை பார்த்தாரு. அந்தச் சமயத்துல டெல்லி பென்ஷன் (Central Government Pention) வாங்கிட்டு இருந்த எங்க மாமா கண்ணையா இந்த பென்ஷன் விவரம் பத்தி எங்க அய்யாகிட்ட சொன்னாங்க. அவரும் எழுதிப் போட்டாரு. டெல்லி பென்ஷன் கொடுக்க லஞ்சம் கேட்டாங்க. 'டெல்லி பென்ஷனே வேணாம். தமிழ்நாட்டு அரசு பென்ஷனே போதும்'னு வந்துட்டாரு எங்க அய்யா. நான் 1972ல் SSLC முடிச்சு அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன். `வேலை வேணும்னா 2000 ரூபா கொடு'னு அந்தக் காலத்துலேயே அதிகாரிங்க லஞ்சம் கேட்டாங்க. வீட்டுக்கு வந்து அய்யாகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். 'நான் தியாகி பென்ஷன் வாங்கிட்டு இருக்கேன். தியாகியா இருக்கிறவன் லஞ்சம் எப்படி கொடுப்பான். அதெல்லாம் கொடுக்க முடியாது'னு சொல்லிட்டாரு. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இதெல்லாம் அவருக்குப் பிடிக்கலை. `காசு கொடுத்து வேலை வாங்கணுமா?'னு விடாப்பிடியா நின்னாரு. ஒருகட்டத்துல அரசு வேலையை மறந்துட்டு அய்யா உயிரோடு இருந்த வரைக்கும் கமிஷன் மண்டியில வேலை பார்த்தேன். இப்போ பத்து வருஷமா ரிக்ஷா ஓட்டிட்டு இருக்கேன். 

அவரை ஆசுவாச படுத்திவிட்டி தியாகி காளியப்பனின் மனைவி வீரம்மாள் அம்மாவிடம் பேசினோம். "நான் ரங்கூன்லயே பிறந்து வளர்ந்தவ. எங்க குடும்பத்துலயும் சுதந்திரப் போராட்டத்துல கலந்துட்டு நாட்டுக்காக ஜெயிலுக்குப் போயிருக்காங்க. இவரைக் கல்யாணம் பண்ணிட்டு அந்த ஊர்ல இருந்து ஆறு புள்ளைங்களோட இந்த ஊருக்கு வந்தோம். அவரோட கடைசி காலத்துல அவரால கமிஷன் கடையில் வேலை செய்ய முடியலை. அவர் சாகுறதுக்குச் சில நாள் முன்னாடி வரைக்கும்கூட 50 தேங்காயை வீட்டுக்குப் பக்கத்துல போட்டு வித்துட்டு இருந்தாரு. மூத்த மகனுக்கு 64 வயசாகுதுயா. அவனோட பொண்டாட்டி தவறிடுச்சு. ரெண்டாவது மகன் உடம்பு சுகமில்லாதவன். அவனால எந்த வேலையும் செய்ய முடியாது. நாங்க 45 வருஷமா இந்தக் கூரை வீட்டுலதான் இருக்கோம். இதுவரைக்கும் கரன்ட் வசதிகூட இல்ல. ராத்திரி நேரம் ரொம்பச் சிரமம். விளக்குக்கு எண்ணெய் இல்லைனா அவ்வளவுதான். இருட்டுலயே ராத்திரி பூரா இருப்போம். இந்த வீட்டுக்கு நாங்க குடிவரும்போது வாடகை 4 ரூபாய். இப்போ 150 ரூபாய் கொடுக்கிறோம். இந்த வீட்டோட  சொந்தக்காரங்களுக்கு எங்களோட நிலைமை நல்லா தெரியும். அதனால குறைஞ்ச வாடகையைதான் எங்ககிட்ட வாங்குறாங்க. 

மகன்

எங்களுக்கு டெல்லி பென்ஷன் கிடைச்சிருந்தாகூட இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது. எனக்கு இதயக் கோளாறு, மண்டை நரம்புக் கோளாறு இருக்கு. இப்போ வர்ற பென்ஷன் பணம்லாம் மருந்துக்கே போயிடுது. ராத்திரியில நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாகுது. சுவரெல்லாம் விரிசலா கிடக்குது. ஒருவேளை சுவரு எங்கமேல இடிஞ்சி விழுந்தாவது என் மகனுங்களுக்கு விடிவுகாலம் பொறக்குமாயா!" என்று கண்ணீர் சிந்துகிறார் வீரம்மாள். 

இறுதியாகப் பேசியவர், "எனக்கு ஒரு ஆசைதான். இந்த லைட்டு எரியாத வீட்டிலயே என் வாழ்நாள் பூரா ஓட்டிட்டேன். மீதி இருக்குற கொஞ்ச காலமாவது நல்ல வீட்டுல வாழணும்னு ஆசைப்படுறேன். இப்போ எனக்கு 84 வயசு. அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. ஒருவேளை எனக்கு ஒண்ணு ஆச்சுனா என் மகன்களை யாருயா பாத்துக்குவாங்க. அவங்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்தா நல்லா இருக்கும்யா" என்றார். 

சுதந்திரத்திற்காக சிறைக்குச் சென்ற தியாகி காளியப்பனின் குடும்பத்திற்கு ஒரு மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. காளியப்பன் குடும்பத்தினருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தைவிட, இன்றைய ஒருநா‌ளை கடக்க அவர்கள் நடத்தும் போராட்டம் மிகக்கொடுமையானது. 


டிரெண்டிங் @ விகடன்