வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (17/03/2018)

கடைசி தொடர்பு:13:40 (17/03/2018)

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு `ஸ்வீட் சர்ப்ரைஸ்’ கொடுக்கும் இன்ஸ்பெக்டர்! - நாகர்கோவிலில் நெகிழ்ச்சி சம்பவம்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வருபவர்களுக்கு இனிப்பு வழங்கி, அறிவுரை வழங்கி அசத்துகிறார், நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் ஜான் ஒய்சிலிராஜ்.

இனிப்பு வழங்கும் இன்ஸ்பெக்டர்

திருச்சியில் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உஷா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், போலீஸாருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பலர் பொங்கினர். இதனால் போலீஸ் குறித்த தவறான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், சிறப்பான போலீஸ் அதிகாரிளும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது நாகர்கோவில் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் அருள் ஜான் ஒய்சிலிராஜின் செயல்பாடுகள்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபடுகிறார், இன்ஸ்பெக்டர் அருள்ஜான் ஒய்சிலிராஜ். ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்த இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் நிறுத்துகிறார். பைக்குகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அங்கு ஏற்கெனவே தயாராக போடப்பட்டுள்ள இருக்கையில் அமரும்படி இன்ஸ்பெக்டர் கூறுகிறார். என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைபதைப்புடன் பைக் ஓட்டிகள் இருக்கையில் காத்திருக்கிறார்கள். அத்தனை இருக்கைகளும் நிரம்பியதும், சிரித்துக்கொண்டே வரும் டிராஃபிக் இன்ஸ்பெக்டர், அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார். தயக்கத்துடன் இனிப்புக்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் பைக் ஓட்டிகள்.

பைக் ஓட்டிகள் மத்தியில் பேசும் இன்ஸ்பெக்டர் அருள்ஜான் ஒய்சிலிராஜ்

பிறகு, அவர்கள் மத்தியில் இன்ஸ்பெக்டர் அருள்ஜான் ஒய்சிலிராஜ் பேசத் தொடங்குகிறார், ``நமது உடலில் கை, கால் ஆகியவை முறிந்துவிட்டால் அவற்றை ஒட்டவைத்துக்கொள்ளலாம். அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து நாம் உயிர்வாழ முடியும். ஆனால், தலை உடைந்துவிட்டால் உயிரிழப்பதைத் தவிர வேறுவழியில்லை. அதனால்தான், அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்துகிறோம். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், நமக்கு மட்டுமல்ல எதிரில் வருபவர்களுக்கும் நம்மால் பாதிப்பு ஏற்படும். எனவே, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். மொபைல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் கவனம் சிதறும். இதனால், விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். வீட்டில் நமது வருகைக்காக உறவினர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதைப் பாதுகாப்புடன் வாழ்வோம்.’’ இவ்வாறு பேசிவிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்பு உணர்வுக் கையேடுகளை அனைவருக்கும் வழங்கினார். பின்னர், அனைவரையும் புன்சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார். கடந்த 2 நாள்களில் மட்டும் இதுபோன்று 4 மீட்டிங்கள் நடத்தி முடித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் அருள்ஜான் ஒய்சில்ராஜ். இப்படியும் நல்ல போலீஸ் இருக்கிறார்களா என ஆச்சர்யப்படுகின்றனர், நாகர்கோவில்வாசிகள்.