விகடன் செய்தி எதிரொலி: புதுகோட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் புத்தகங்களைப் பரிசளிக்க முன்வந்த பெண்! | Theni woman to present Abdul kalam's books to Pudukottai government school students

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (17/03/2018)

விகடன் செய்தி எதிரொலி: புதுகோட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் புத்தகங்களைப் பரிசளிக்க முன்வந்த பெண்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள உருவம்பட்டி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய இரண்டு புத்தகங்களையும் பரிசளிக்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண் முன்வந்திருக்கிறார்.

சுதாஅன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் அவர்களின் மனம் கவர்ந்த ஆதர்ச நாயகனான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது பற்றியும் அதைப் பார்த்த உருவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 'அக்னி சிறகுகள்', 'இந்தியா 2020' ஆகிய புத்தகங்களைப் படிக்க விரும்புவதாகவும் நமது இணைய தளத்தில் கடந்த 15.3.2018 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுதா என்பவர், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்புகொண்டு, மாணவ மாணவிகளைப் பற்றி விசாரித்துவிட்டு, அவர்களுக்குத் தங்கள் அமைப்பின் சார்பாகக் கலாம் எழுதிய இரண்டு புத்தகங்களையும் பரிசளிக்க விரும்புவதாகவும் முதல்கட்டமாக 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை 11 பிரதிகள் வாங்கி, உடனடியாகக் கூரியரில் அனுப்புவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இந்த சுதா, 'கலாம் அறப்பணி நல் இயக்கம்' என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன்  நடத்தி வருகிறார். அதன்மூலம் கலாம் பற்றிய பல்வேறு நல் விஷயங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியைத் தற்போது இவர்கள் செய்து வருகின்றனர். நாம் சுதாவிடம் பேசினோம். 

"உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 'சலாம் கலாம்' குறும்படம் காண்பிக்கப்பட்டதையும் பின்பு, மாணவர்களின் கருத்துகளையும் விகடன் இணையதள செய்தி மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். உடனடியாக நான் இப்பள்ளி தலைமை ஆசிரியரைத் தொடர்புகொண்டு பேச நினைத்தேன். அவரது அலைபேசி எண் இல்லாததால் எங்கள் இயக்கத்தின் உறுப்பினரும் தேனி மாவட்ட மறுவாழ்வு மையத்தில் பல நோக்கு மறுவாழ்வு உதவியாளராக இருக்கும் கோகிலாவைத் தொடர்புகொண்டு பள்ளித் தலைமை ஆசிரியர் எண் பெற்றுத் தர கேட்டுக்கொண்டேன். அவர் உடனடியாக அன்னவாசல்   தொலைபேசி  நிலையத்தைத் தொடர்புகொண்டு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் நம்பரை வாங்கி, அவர்களிடம் பேசி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பொன்னழகு எண்ணை வாங்கித் தந்தார். அவரிடம் நான் பேசினேன். விஷயம் முழுவதையும் கேட்டவர், உருவம்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தியின் நம்பரைத் தந்தார். அவரிடம் எங்கள் விருப்பத்தைக் கூறினோம். சாந்தியும் மிகவும் சந்தோஷமாகத் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு கலாம் புத்தகங்களைப் பரிசளிக்க சம்மதித்தார். எங்களது 'கலாம் அறப்பணி நல் இயக்கம்' கலாம் அய்யாவின். வாழ்க்கை, செயலை, சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. மேலும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அபாகஸ் உபகரணம் இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளியில் வழங்கினோம். மேலும் மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்க்கும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக 'வளரும் நேர்மறை சிந்தனையாளர்' என்ற விருதையும் மாணவ, மாணவிகளுக்கு  வழங்கிக் கௌரவிக்கிறோம். விகடன்  இணையதள செய்தியைப் படித்ததும்  இப்பள்ளி குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் எஙகள் இயக்கத்தின் சார்பாக அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 ஆகிய புத்தகங்கள் வழங்குவது என்றும் கூடுதலாக, அடுத்த கல்வி ஆண்டில் அபாகஸ் உபகரணங்களை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.