வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (17/03/2018)

கடைசி தொடர்பு:14:20 (17/03/2018)

`புயல் எச்சரிக்கை வாபஸ் எதிரொலி!’ - ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

இந்தியப் பெருங்கடலில் உருவான புயல் எச்சரிக்கை அறிவிப்பால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வார காலத்துக்குப் பின் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

கடலுக்குச் சென்ற மீனவர்கள்

இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் லட்சத்தீவு இடையே கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. இதனால் வங்கக் கடலின் பாக் ஜலசந்தி மற்றும் பாக் நீரிணை பகுதியில் வழக்கத்தைவிட அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 

இதனால், கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி 2 நாள்களுக்கு முன் வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து புயல் எச்சரிக்கை அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. புயல் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதை அடுத்து நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் மீன் பிடிக்கச் சென்றனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு நேற்று ஓய்வு நாள் என்பதால் இன்று (17.3.2018) காலை உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.