`நாஞ்சில் சம்பத் விலகலால் இழப்பு இல்லை; வருத்தம் மட்டுமே!’ - தினகரன் பளீச்

'திராவிடத்தைப் புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 

டி.டி.வி. தினகரன்

டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த நாஞ்சில் சம்பத், மதுரை மேலூரில் தினகரன் நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார். இந்த நிலையில், அரசியலிருந்து விலகுவதாக இன்று நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத், இலக்கிய மேடைகளில் தன்னைக் காணலாம் என்றும் கூறினார். 

இந்தநிலையில், நாஞ்சில் சம்பத் விலகல்குறித்து சென்னையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். ``எங்களுக்காகப் பல இடங்களுக்குச் சென்று மேடைகளில் பேசியவர் நாஞ்சில் சம்பத். இயக்கத்தின் பெயரைக் காரணமாகக் கூறி அவர் விலகியிருப்பது வருத்தமளிக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் பெயரால் நாங்கள் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியே, ஜெயலலிதாவுக்கு `சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் கொடுத்தார். 

என்னைவிட வயதில் மூத்தவர் நாஞ்சில் சம்பத். அவர், அண்ணா மற்றும் பெரியாரைப் பார்த்திருக்கலாம். அவர், தி.மு.க மற்றும் ம.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்திருக்கிறார். அதன்பின், ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் வந்து இணைந்தார். தற்போது, திராவிடத்தைப் புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஏதோ பச்சைப் படுகொலை செய்ததாக அவர் பேசியுள்ளார். அப்படி நான் எதுவும் செய்யவில்லை. இது எல்லாம் அவர் நல்லாதான் பேசுவார். ஜெயலலிதாவுக்கும், திராவிடத்திற்கும் ஏதோ சம்பந்தமில்லாததுபோல நாஞ்சில் சம்பத் பேசுகிறார். ஜெயலலிதாவை அவமதிப்பதுபோல அவர் பேசியதுதான் வருத்தமளிக்கிறது. 

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 3 பெயர்களைப் பரிந்துரைசெய்தோம். அந்தப் பெயர்களில் திராவிடம் இருந்தது. அவை எங்களுக்குக் கிடைக்கவில்லை. திராவிடம் என்ற சொல், கட்சிப் பெயரில் இல்லை என்பதைக் காரணமாகக் கூறி அவர் விலகியது வருத்தம் அளிக்கிறது. அம்மா மக்கள் முனேற்றக் கழகம் என்பது இடைகால ஏற்பாடுதான். இது நாஞ்சில் சம்பத்துக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். கொடியில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளதே என்ற பெருந்தன்மைகூட இல்லாமல், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். அதை நாங்கள் முறையாக நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம். நாஞ்சில் சம்பத் விலகியதால், எங்களுக்கு இழப்பில்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!