வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (17/03/2018)

கடைசி தொடர்பு:14:40 (17/03/2018)

`அரசு சுகாதார மையங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதா?’ - கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களின் சுகாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். சுகாதார நிலையங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதைத் தடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தென்மண்டலச் செயலாளர் கார்த்தீஸ்வரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தென்மண்டலத் தலைவர் அகிலன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுல்த்தான் ராஜா, செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உட்பட, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக, சுந்தரம் நன்றி கூறினார்.