`ஜனநாயகரீதியாகக் கருத்து சொன்ன கே.சி.பழனிசாமியை அ.தி.மு.க-விலிருந்து நீக்கியது வேதனை!’ - திருமாவளவன் கருத்து

ஜனநாயகரீதியில் கருத்து சொன்ன கே.சி. பழனிசாமியை அ.தி.மு.க-விலிருந்து நீக்கியிருப்பது வேதனையளிப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திருமாவளவன்

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று (17.3.2018) மதுரை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,''காவிரி மேலாண்மை வாரியம், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும்,  கர்நாடகத் தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர், 'ஆணையம் அமைக்க வேண்டும்  என உச்ச நீதிமன்றம் கூறவில்லை' என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால், அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்படும். நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க செயல்பட வேண்டும்.

மத்திய அரசு, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதை  எதிர்த்து எனது தலைமையில் வரும் 24-ல் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகம் சாதி வெறிக்கு இடம் கொடுத்தாலும், மதவெறிக்கு இடம் கொடுக்கவில்லை. ராமராஜ்ஜியம் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கக் கூடாது. அ.தி.மு.க-வில் ஜனநாயகரீதியாக கருத்து சொன்ன கே.சி.பழனிசாமியை  நீக்கியது வேதனையளிக்கிறது. கட்சியினர்மீது இப்படி நடவடிக்கை எடுப்பவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எப்படி ஆதரவாக இருப்பார்கள்? அ.தி.மு.க எம்.பி-க்கள் மட்டுமல்ல, பா.ம.க நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!