வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (30/06/2018)

பயிற்றுவித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து குருகாணிக்கை செலுத்திய திருவண்ணாமலை ஆட்சியர்!


 ஆசிரியர்களிடம் ஆசிபெற்ற திருவண்ணாமலை ஆட்சியர்

சாதாரண பியூன் ஆனால்கூட, தன்னை ஏணிகளாக இருந்து ஏற்றிவிட்ட ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்களை மறந்துவிடுகிற காலம் இது. ஆனால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் கந்தசாமி, தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து 'குருகாணிக்கை' செய்தது, நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் கந்தசாமியின் சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது. இவர் 1984 - 1987 ஆண்டுகளில், கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்திருக்கிறார். அதன்பிறகு, அரசுத் துறையில் பணிக்குச் சேர்ந்து, இப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கிறார். இவரோடு, கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர், கரூரில் உள்ள கொங்கு கல்லூரியின் தாளாளர் சிவா. அவர், 1984-1987 பேட்ஜில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்தார். அந்த வகையில், திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியையும் அழைத்திருந்தார். இவரைப்போல, பல பெரிய பொறுப்புகளில் இருந்தவர்களும் வர, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி களைகட்டியது. தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து விழா நடைபெற்ற கரூர் பாலிடெக்னிக் கல்லூரி வரை, கலெக்டர் கந்தசாமி தொடங்கி அனைவரும் தாங்கள் வந்த கார் உள்ளிட்ட வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, கல்லூரிப் பேருந்தில் மாணவர்களைப் போல சிரித்துப் பேசிக்கொண்டும், பழைய நினைவுகளில் மூழ்கிக்கொண்டும் வந்துசேர்ந்தனர்.

விழாவில் எல்லோரும், அவரவர் மலரும் நினைவுகளையும் கல்லூரி ஆசிரியர்கள் தங்களை செதுக்கிய நிகழ்வுகளையும் உணர்ச்சி மேலிட, கண்ணீர் மல்க விவரித்தனர். அதைத்தொடர்ந்து பேச வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, "நான் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு வேர், இந்தக் கல்லூரிதான். என்னை பண்புள்ளவனாகவும், முயற்சிகளைத் தளராது மேற்கொள்பவனாகவும் ஆக்கி, உரமேற்றியது இந்தக் கல்லூரி ஆசிரியர்களான நீங்கள்தான். நீங்கள் எனக்குள் விதைத்த தன்னம்பிக்கை விதையில்தான், நான் இன்று இப்படி உயரத்தில் பூத்துக் குலுங்குகிறேன். இப்படி என்னை உயர்த்திய உங்களுக்கு, இதைவிட வேறு வழியில் குருகாணிக்கை செலுத்த முடியுமான்னு எனக்கு தெரியலை" என்றபடி, ஆசிரியர்களே எதிர்பார்க்காத வகையில் மேடையில் வீற்றிருந்த ஏழு ஆசிரியர்களின் கால்களிலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அதைப் பார்த்ததும் பதறிபோன ஆசிரியர்கள், 'சார், என்ன இதெல்லாம்' என்றபடி தடுக்கப் பார்த்தனர். ஆனால்,முழுமையாக ஆசிரியர்களின் ஆசிர்வாதங்களை வாங்கிய பிறகே எழுந்தார் கந்தசாமி.

 "படிக்கிற காலத்தில் எப்படி பண்போடு இருந்தாரோ, அது இம்மியளவும் குறையாமல், இப்போதும் அதே பண்போடு இருக்கிறார் கந்தசாமி. அந்தப் பண்புதான், அவரை மாவட்ட ஆட்சித்தலைவராக்கி இருக்கிறது. ஒவ்வொரு மாணவனுக்கும் கந்தசாமி ரோல்மாடல். அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்" என்று நெக்குருகச் சொன்னார்கள், கந்தசாமியின் முன்னாள் ஆசிரியர்கள்.