வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (19/03/2018)

கடைசி தொடர்பு:15:12 (19/03/2018)

திருச்சி சிறையில் சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரைத் தாக்கிய யுவராஜ்!

yuvaraj, யுவராஜ்

திருச்சி சிறைக்குள் சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் தாக்கியதாகத் தகவல் வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்பட்ட நிலையில், 2015 ஜூன் 24-ம்தேதி திருச்செங்கோட்டில் உள்ள மலைக்கோட்டைக்குக் காதலித்தப் பெண்ணுடன் சென்றார். பின்னர் அவர் காணாமல் போனார். அதன்பிறகு அவர், பள்ளிப்பாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய திருச்செங்கோடு போலீஸார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸில் சிக்காமல், தலைமறைவாக இருந்த யுவராஜ், பல மாதங்கள் போலீஸுக்கு எதிராக வாட்ஸ் அப் தகவல்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பாக இவர் வெளியிட்ட ஆடியோ, வைரல் ஆனது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கை விசாரித்த நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்தனர். இவர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் யுவராஜ் வேலூர் சிறையிலும், அவரது கார் ஓட்டுநர் அருண் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இடையே ஜாமீன் கிடைத்தாலும், அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக யுவராஜ் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த சில மாதங்களாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ், தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, யுவராஜ் கடந்த 2-ம்தேதி திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். திருச்சியில் உயர் பாதுகாப்புப் பிரிவான 2-ம் வகுப்பு அலகில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளார். இப்படியான சூழலில், அதே பிரிவில் கடந்த 8 வருடங்களாகச் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, திருச்சி மத்திய சிறைச்சாலை உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், அப்பகுதியில் உள்ள தண்ணீர்க் குழாயில் தனது சட்டையை துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யுவராஜ், தண்ணீரை ஏன் வீணாக்குகிறாய் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சுபாஷ் சந்திர கபூர், இது பொதுக்குழாய்தானே, நீ என்ன கேள்வி கேட்கிறாய் என ஆங்கிலத்தில் பதில் கூற, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது யுவராஜ், சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரின் கன்னத்தில் அறைந்துவிட, சுபாஷ் கபூர் சத்தம்போட்டு கூச்சல் எழுப்ப, அங்கே அதிகாரிகள், சக கைதிகள் ஓடி வந்தனர். சிறைத்துறை அதிகாரிகளிடம் சுபாஷ் சந்திர கபூர் முறையிட்டதை அடுத்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், யுவராஜையும், சுபாஷ் சந்திர கபூரையும் விசாரணை நடத்தியதுடன் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததால் பலியான உஷா வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், இதே உயர் பாதுகாப்பு அலகில் தங்க வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் திருச்சி மத்திய சிறையில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்