வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (17/03/2018)

கடைசி தொடர்பு:16:03 (17/03/2018)

`திராவிட நாடு கேட்கவோ குரல் கொடுக்கவோ இல்லை!’ - ஸ்டாலின் பளீச்

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு இருக்கும் துணிவும் ரோஷமும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

ஸ்டாலின்

``ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால்,  பட்ஜெட்மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் சந்திரபாபு நாயுடு விலகினார்.

இதேபோல், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும். இல்லையெனில், அது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தன் கருத்தை முன்வைத்துள்ளார் ஸ்டாலின்.

அதுமட்டுமின்றி, `தென்மாநிலங்களெல்லாம் ஒன்று சேர்ந்து திராவிடம் எனும் நாடு போன்ற கொள்கைகளை முன்வைக்கின்றனரே என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தற்போது உள்ள சூழ்நிலையில், அவ்வாறான தோற்றமிருக்கிறது. அப்படி வந்தால், தி.மு.க சார்பில் வரவேற்போம் என்றுதான் சொன்னேன். 

திராவிட நாடு என்ற கொள்கையை அண்ணா அன்றைக்கே கைவிட்டுவிட்டார். ஆனால், திராவிடம் என்ற நாட்டை தி.மு.க கேட்டது மாதிரியும் அதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து, ஆதரிப்பது மாதிரியும் ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்காக மிகப் பெரிய பிரசாரத்தை நடத்தி வருகிறது’’ என்று, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது குற்றம்சாட்டியுள்ளார்.