வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (17/03/2018)

கடைசி தொடர்பு:13:04 (19/03/2018)

கத்திமுனையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

 நண்பனின் இரண்டாவது மனைவியைக் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சமையல் மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். திரிபுராவைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தையும் உள்ளது. இஸ்மாயிலின் முதல் மனைவி திரிபுராவில் வசிக்கிறார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஹீனா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளார் இஸ்மாயில். இஸ்மாயிலின் பள்ளி நண்பர் ஜஹாங்கீர் உசேன். இவர், ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் சமையல் மாஸ்டராகப் பணியாற்றுகிறார். இவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது, ஜஹாங்கீரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். 

பாலியல் வன்கொடுமை

அடிக்கடி இஸ்மாயில் வீட்டுக்கு வரும் ஜஹாங்கீர், சஹீனாவை தங்கை என்று அன்போடு அழைப்பார். இருப்பினும் ஜஹாங்கீரின் உள்மனதில், சஹீனாமீது வேறுவிதமான ஆசை இருந்துவந்தது. இந்தச் சமயத்தில் சம்பவத்தன்று இஸ்மாயில் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் சஹீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, ஜஹாங்கீர், அங்கு வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த சஹீனாவை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இந்தத் தகவலை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஜஹாங்கீர் தப்பி ஓடிவிட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த இஸ்மாயிலிடம் சஹீனா நடந்த சம்பவத்தைச் சொல்லி கதறியழுதார். இந்தக் காரியத்தை உயிர் நண்பனே செய்ததால் வேதனையடைந்தார் இஸ்மாயில். இதையடுத்து, சஹீனா, செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீஸார் தலைமறைவாக இருந்த ஜஹாங்கீரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, ஜஹாங்கீர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.