மாணவர்களின் கண் பாதிப்புக்குக் காரணமான பள்ளி நிர்வாகிமீது வழக்குப்பதிவு!

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் கண் பாதிப்புக்குக் காரணமாக இருந்த பள்ளியின் நிர்வாகி மற்றும் மின்விளக்கு அமைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப் பதிவு - கண் பாதிப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்.வி.இந்து தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. அப்போது அதிக வெளிச்சத்தை ஒளிரும் சக்தி வாய்ந்த மின்விளக்குகள் மேடையிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடங்களிலும் பயன்படுத்தப்பட்டன. அதில் இருந்து வெளிவந்த அதிகமான ஒளியின் காரணமாக 70 மாணவர்கள் மற்றும் 30-க்கும் அதிகமான பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கண் சிவந்ததுடன் எரிச்சல் மற்றும் நீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனைவரும் நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இது குறித்து கூறிய அவர், ``அதிக வெளிச்சம் காரணமாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

கண் பாதிப்பு

இதற்கான முழுக் காரணம் குறித்து அறிய நெல்லை அரசு மருத்துவமனையின் டீன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிய விசாரணை நடத்துவார்கள். அத்துடன், ஏர்வாடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். ஒளியின் காரணமாக இது போன்று பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்’’ என்றார்.

இதனிடையே, ஏர்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாகக் கவனக்குறைவாகச் செயல்படுதல், குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பள்ளி நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் ஒளி, ஒலி அமைப்பாளர் ஆகியோர்மீது ஏர்வாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே சமயத்தில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!