`வீரர்களைத் திரும்ப அழைத்த வங்கதேச கேப்டன்; ட்ரெஸ்ஸிங் ரூம் கண்ணாடி உடைப்பு’ - சர்ச்சைக்குள்ளான நிதாஹஸ் கோப்பை டி20 போட்டி

நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் ஏற்கெனவே இந்தியா ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில் பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் ஃபைனலுக்கு முன்னேறியது.

வங்கதேசம்

photo credit : Cricbuzz‏

இதன்மூலம், நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது வங்கதேசம். இதற்கிடையே, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணி வீரர்களுக்கு இடையே உருவான வார்த்தைப் போர் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் வங்கதேச அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கையின், இஸ்ரு உடானா பந்துவீச இரண்டாவது பந்தில் முஸ்தபிஜூர் ரஹ்மான் அவுட் ஆகவே பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் முதல் இரண்டு பந்துகளுமே பவுன்சர் ஆக வீச, அதற்கு வங்கதேச வீரர்கள் நோ பால் அப்பீல் செய்தனர். ஆனால் மெயின் அம்பயர் நோ பால் தர மறுக்கவே, லெக் அம்பயர் நோ - பால் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதன்பின், அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இலங்கை வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த நுருல் ஹுசைன்,  இலங்கையின் திஸாரா பெரேரா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதேபோல் கேப்டன் ஷகிப் அல் ஹசனும் மைதானத்துக்கு வந்து வீரர்களைத் திரும்ப அழைத்ததும், சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவழியாக வங்கதேச வீரர்கள் திரும்ப வந்து விளையாடினர். 19.5 ஓவரில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் முகமதுல்லா. வெற்றிக்குப் பின் 'பாம்பு டான்ஸ்' ஆடி, வங்கதேச வீரர்கள் மகிழ்ந்தனர். இந்தச் சம்பவத்தின்போது, வங்கதேச அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதை ட்ரஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்கள்தான் உடைத்தார்கள் என விவாதம் எழுந்துள்ளது. மைதான ஊழியர் ஒருவர் அதைப் பார்த்து நடுவர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இதற்கான, வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!