`அரியலூர் மக்களின் கனவுத் திட்டத்தை இருட்டடிப்புச் செய்யும் அ.தி.மு.க அரசு!’ - கொதிக்கும் விவசாயிகள் | Ariyalur: Thirumanur farmers protest against TN government

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:17:00 (17/03/2018)

`அரியலூர் மக்களின் கனவுத் திட்டத்தை இருட்டடிப்புச் செய்யும் அ.தி.மு.க அரசு!’ - கொதிக்கும் விவசாயிகள்

நடப்பு பட்ஜெட்டில் மருதையாறு குறுக்கே அணைகட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                             


போராட்டத்தில் ஈடுபட்டனர்  மழைக்காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி அரியலூர் மாவட்டத்தின் வழியாகச் சென்று வீணாகக் கடலில் கலக்கும் மருதையாறு நீரை சேமிக்கும் வகையில் மறுதையாற்றின் குறுக்கே அணை கட்டி, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சுமார் 20 கி.மீ தூரம் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர 25 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்பகுதி மக்களின் கனவுத் திட்டம் இது. இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதற்காக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

                               மறியலில் ஈடுபட்ட அரியலூர் விவசாயிகள்

இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் அரியலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என விவசாயிகள் எதிர்பார்த்தனர் அப்போதும் அறிவிப்பு வெளியிடவில்லை. நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிப்பு வெளியாகாததால், அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நிதி ஒதுக்கி, திட்டத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாக அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

                       

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது விவசாயிகள் 50,000 ஏக்கரில் விவசாயம் செய்ய இயலும். கரைவெட்டி பரதூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தூத்தூர் வரை 36 பஞ்சாயத்துக்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். துமட்டுமல்லாமல் இந்தத் தண்ணீர் கிடைத்தால் காவிரி நீருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் விவசாயிகள்.