வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (17/03/2018)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை! - டி.டி.வி.தினகரன் தாக்கு

தமிழகத்தின் முக்கிய பிரச்னையாகக் கருதப்பட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதலில் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன்

வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறவிருக்கும் தி.மு.க. மண்டல மாநாட்டின் திடலை தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, மாநாட்டு வளாகத்தில் உள்ள புகைப்படக் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

அப்போது, தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பதாகத் தெரிகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய ஸ்டாலின், `தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்’ என்று தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் தான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கிவிட்டதாக கூறிய ஸ்டாலின் ‘ திராவிட நாடு என்ற கொள்கையை அண்ணா அன்றைக்கே கைவிட்டுவிட்டார். ஆனால், திராவிடம் என்ற நாட்டை தி.மு.க கேட்டது மாதிரியும் அதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து, ஆதரிப்பது மாதிரியும் ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்காக மிகப் பெரிய பிரசாரத்தை நடத்தி வருகிறது’ என்று விளக்கம் அளித்தார்.

இதனிடையே செய்தியாளர்கள், டி.டி.வி. தினகரனிடம் திராவிட நாடு குறித்து ஸ்டாலின் கூறிய கருத்து பற்றி கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் `ஸ்டாலின் முதலில், தமிழகத்தின் அடிப்படை உரிமையான காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, அவர் அதிகாரத்தில் இருக்கும்போதே, அவரின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் அவர் அதைச் செய்யவில்லை. இதைவிட்டு விட்டு வேறு ஒரு பாதையை ஸ்டாலின் எடுத்துள்ளார்’ என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.