`ராஜினாமா செய்யத் தயங்குவது இதனால்தான்!’ - தம்பிதுரை பளீச்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமா செய்வது நல்ல செயலாக இருக்க முடியாது" என்று மக்களவை துணை சபாநாயகரும் அ.தி.மு.க எம்.பி-யுமான தம்பிதுரை தெரிவித்தார்.

      

கரூரில் வேளாண்மை அறிவியல் மையங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூர் வந்தார். 10 மணிக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க,10.20 மணி போலதான் தம்பிதுரை வந்தார். ஆனால், அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் உள்ளிட்ட யாரும் மேடையில் இல்லாமல் போக, முகம் கடுகடுத்தபடி மேடையில் ஏறி தனியாக அமர்ந்தார். அங்கே இருந்த தினசரி பத்திரிகையை எடுத்து படித்தார். ஆனால், 20 நிமிடங்கள் கழித்துதான் அமைச்சர் அரங்குக்குள் நுழைந்தார். அப்போது, தம்பிதுரை தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து பதற்றமான அமைச்சர் மூச்சிரைக்க ஓடோடிப்போய் மேடையில் எறினார். தாமதத்துக்கான காரணத்தை தம்பிதுரையிடம் அமைச்சர் ஒப்பிவிக்க, அதை தம்பிதுரை கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, "மக்கள் 5 ஆண்டுகளுக்குப் பணியாற்ற வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள். தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்குதான் தொடர்ந்து போராடி வருகிறோம். குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ராஜினாமா செய்வது நல்ல செயலாக இருக்க முடியாது. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளது. 4 வாரகாலம் முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்னும் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததாலே மக்களவையில் தொடர்ந்து போராடி வருகிறோம். இதனால் மக்களவை முடங்கியது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிழகத்தின் உரிமைகளைப் பெற போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் நமக்கு அளித்துள்ள உரிமை. எனவே, ஒரு நாளில் ராஜினாமா செய்துவிட்டால் மக்களவைத் தொடர்ந்து செயல்படதான்போகிறது. அதன்பின், நமது உரிமையைக் கேட்டு பெற முடியாது என்கிற காரணத்தில்தான் தொடர்ந்து போராடி வருகிறோம். ராஜினாமா செய்ய தயங்குகிறோம். எப்பாடுப்பட்டாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!