`பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு!’ - போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு

``பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
 

       

கரூர் நகராட்சி 22, 23, 24 மற்றும் 25 வது வார்டு பகுதிகளில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 22-ல் வேம்புமாரியம்மன் கோயில் அருகிலுள்ள ஈஸ்வரன் கோயில் பின்புறப் பகுதி, வார்டு எண் 23-ல் 5 ரோடு இறக்கத்திலுள்ள வேலு ஆரம்பப்பள்ளி அருகிலுள்ள பகுதி, வார்டு எண் 24-ல் வ.உ.சி தெரு வாட்டர் டேங்க் அருகிலுள்ள பகுதி, வார்டு எண் 25-ல் பள்ளி வாசல் அருகிலுள்ள மாவடியான கோயில் பகுதி ஆகிய இடங்களில் இன்று (17.3.2018) நாடாளுமன்ற துணை சபாநாயர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் பிரித்து கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர். 

இந்நிகழ்ச்சியின்போது பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடிச் சென்று பொதுமக்களின் குறைகள் தேவைகள் மனுக்களாகப் பெற்று உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் குடிநீர், மின்விளக்குத் தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடி தீர்வு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!