வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (18/03/2018)

கடைசி தொடர்பு:18:43 (18/03/2018)

தமிழகத்தில் கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்... என்ன காரணம்?

மிழகக் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தொண்டியில் திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் - கடல்

நாட்டில் நீண்ட கடற்பரப்பை கொண்ட கடலோரப் பகுதியாகத் தமிழகம் விளங்கி வருகிறது. பெரும்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வங்கக் கடலின் பாக் நீரினை கடலோரப் பகுதிகளில் அரிய வகை உயிரினங்களான டால்பின், திமிங்கலம் ஆகியன தொடர்ச்சியாக உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன.

சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் சீர்காழி கடலோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் நேற்று முன்தினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக் கடலோரப் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் 30 அடி நீளத்துடன் 8 டன் எடை கொண்ட இந்த BRYDE'S WHALE எனப்படும் இந்தத் திமிங்கலம் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 

இது குறித்து தகவலறிந்த வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்று கரை ஒதுங்கிய திமிங்கலத்தினை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடல் கூறாய்வு செய்து பின்னர் அதனை அங்கேயே புதைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து கரை ஒதுங்கி வருவதற்கு முக்கியமாக ஐந்து காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாகக் கடலில் வாழக் கூடிய பெரிய சுறா மீன்களின் தாக்குதலில் தப்பிக்க முயற்சி செய்யும் திமிங்கலம் கரையோரத்தை நாடி வருகிறது. அவ்வாறு வரும் போது போதிய நீர்ப்பெருக்கு இல்லாத நிலையில் திமிங்கலங்களால் நீந்த முடியாமல் கரை ஒதுங்குகின்றன. அடுத்ததாகப் பூமியில் நிகழ்வது போலவே கடலினுள் ஏற்படும் பூகம்பங்களால் பாதிக்கப்படும். இது போன்ற உயிரினங்கள் அதில் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. மூன்றாவதாக, பொதுவாகக் கடலின் நீரோட்டத்திற்கு எதிர் திசையிலேயே திமிங்கலங்கள் பயணிக்கும். கடல் நீர் மட்டம் குறைவதால் இவற்றின் வழித்தடம் மாறிச் செல்ல நேர்வதாலும் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. நான்காவதாகப் பெரிய கப்பல்கள் மற்றும் மீன்பிடி கப்பல்கள் இவற்றின் மீது மோதுவதாலும், கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகளாலும், இயற்கைக்கு மாறான மீன்பிடி முறைகளாலும் இது போன்ற உயிரினங்கள் உயிரிழக்கும். இறுதியாகக் கடலில் எழும் அதிர்வுகள், அதிகளவிலான ஒலி ஏற்படுதல், பிளாஸ்டிக் உள்ளிட்ட மாசுகள் கடலில் கலப்பது போன்ற காரணங்களாலும் இவ்வகை உயிரிழப்புகள் நடக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வரும் நிலையில், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உயிரிழப்புக்கான காரணங்களை களைவதுடன் கடலில் வாழும் அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்