'சிறுதானியங்களையும் கொள்முதல் செய்யுங்கள்' - அரசுக்கு மானாவாரி விவசாயிகள் கோரிக்கை! | farmers demand the TN government to Purchase millets also

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (18/03/2018)

கடைசி தொடர்பு:04:15 (18/03/2018)

'சிறுதானியங்களையும் கொள்முதல் செய்யுங்கள்' - அரசுக்கு மானாவாரி விவசாயிகள் கோரிக்கை!

நெல் மற்றும் பயறு வகைகளை அரசு கொள்முதல் செய்வது போல, சிறுதானியங்களையும் அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மானாவாரி விவசாயிகள்

நடப்பு, 2018 – 19-ம் ஆண்டுக்கான பட்ஜெட், வியாழக்கிழமை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், இதுவரையில் நஞ்சைப்பயிரான நெல் விவசாயிகளிடமிருந்து, நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல், இனி புஞ்சைப் பயிர்களான பயறு மற்றும் பருப்பு வகைகளும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மானாவாரி விவசாயிகளிடமிருந்து வரவேற்பு எழுந்துள்ள நிலையில், சிறுதானியங்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

சிறுதானியங்கள்

இதுகுறித்து ம.தி.மு.க மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜனிடம் பேசினோம். அதில், ‛‛தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு, 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆற்றுப்பாசனம், டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, சோளம் வகைகளும்,  உளுந்து, பாசி, துவரை, தட்டை, கொள்ளு போன்ற புஞ்சைப்பயிர்களை தான் விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 60% உணவு தேவையை மானாவாரி விவசாயிகள் தான் பூர்த்தி செய்கின்றனர். ஆனால்,  பயறு வகைகள், சிறுதானியங்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். இதில் இடைத்தரகர்களின் தலையீடும் அதிகம். அதே போல் பயிர்காப்பீடு பெறுவதிலும் மானாவாரி விவசாயிகளுக்கு பல சிக்கல்கள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நெற்பயிரை அரசே நேரடி கொள்முதல் செய்வது போல, மானாவாரி பயிர்களையும் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். இந்த ஆண்டிலிருந்து, பயிறு மற்றும் பருப்பு வகைகளை அரசு நேரடி கொள்முதல் செய்யும் என அறிவித்ததுள்ளது. அதே போல் சிறுதானியங்களையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close