நடராசனுக்கு என்ன ஆனது? - மீண்டும் மருத்துவ சிகிச்சை | sasikala's husband Nadarasan admitted at hospital due to illness

வெளியிடப்பட்ட நேரம்: 22:16 (17/03/2018)

கடைசி தொடர்பு:22:16 (17/03/2018)

நடராசனுக்கு என்ன ஆனது? - மீண்டும் மருத்துவ சிகிச்சை

சசிகலாவின் கணவர் நடராசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடராசன்

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் ம.நடராசன் (வயது 74) கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, அவ்வப்போது உடல்நலம் குன்றி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்த அதை சரிபடுத்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை பெரும்பாகத்த்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கவே, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பான, அனுமதி வாங்குவதற்கான சட்ட வேலைகளில்  சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டனர். 

இதற்கிடையே, தஞ்சாவூரில் ஓர் விபத்தில் மரணம் அடைந்த 19 வயது வாலிபர் கார்த்திக் என்பவரது, கல்லீரலை நடராஜனுக்கு பொருத்த ஏற்பாடானது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சில தினங்கள் நடராசன் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில் "நடராசன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்கள். இதன்பின், அக்டோபர்  12-ம் தேதி 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா சென்னை வந்தார். தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கிய அவர், அங்கிருந்து தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவமனை சென்று கணவரை அருகில் இருந்து பார்த்து வந்தார். நவம்பர் மாதம் உடல்நிலை நன்கு தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் நோய் தோற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பார்வையாளர்களை யாரும் சந்திக்க கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். 

இதனையடுத்து, நடராசன் மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் விடுதியில், ஓய்வில் இருந்தார். இருப்பினும், அவ்வப்போது சென்னை மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் உடல்நிலை, வழக்கத்துக்கு மாறாக ஆனதால் உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்று வெளியே கசிய ஆரம்பிக்கவே, அது மன்னார்குடியில் உள்ள நடராசன், சசிகலா குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க