நித்தி்யானந்தா திடீர் திருச்செந்துார் வருகை.! எதிரிகளை வீழ்த்த முருகனிடம் யாகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பெங்களூரு பிடதி ஆசிரம சுவாமி நித்யானந்தா சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சத்ரு சம்ஹார பூஜை செய்தார். அவரைக் காண கோவிலின் முன்பு பக்தர்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

நித்யானந்தா அவரது சிஷ்யர்கள் மற்றும் சிஷ்யைகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்தார். தேவர்குடில் அருகில் காரில் இறங்கிய அவர், கடற்கரைக்குச் சென்று காலை நனைத்து, கடல்நீரை அவரது தலையில் தெளித்துக் கொண்டு  பக்தர்கள் மீதும் தெளித்தார். பின், கோவில் வாசலுக்குச் சென்ற நித்திக்கு திரிசுந்தரர்களால் பூரண கும்ப கலச மரியாதை அளிக்கப்பட்டது.

கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர் சுப்பிரமணியர் சன்னிதியில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். உற்சவரான சண்முகரையும் தரிசித்து சண்முகார்ச்சனை செய்தார். தொடர்ந்து, திருக்கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள சூரசம்ஹாரமூர்த்தி சன்னிதியில் அமர்ந்து எதிரிகளை பலம் இழக்கச் செய்யும் சத்ருசம்ஹார பூஜையில் கலந்து கொண்டார். இதில், நித்தியானந்தாவிற்காக சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து அபிசேகம், தீபாராதனையும் நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணிநேரம் வரை இந்த பூஜைகள் நடைபெற்றன. நித்யானந்தாவின் திடீர் வருகை குறித்து அவருடன் வந்திருந்த  பி.ஆர்.ஓ.விடம் பேசினோம்."சுவாமி நித்யானந்தாவுடன் வந்திருக்கும் சிஷ்யர்கள், சிஷ்யைகளுக்கு பிடதி ஆசிரமத்தில் சில நாட்களுக்கு முன்பு தீட்சிதை கொடுக்கபட்டது. எனவே, இதனால் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறோம். ஒவ்வொரு தலத்தின் சிறப்பு குறித்தும் வழிபடும் முறை குறித்தும் சுவாமிஜி, சிஷ்யர்கள், சிஷ்யைகளுக்கு எடுத்துரைத்து வருகிறார். சத்ரு சம்ஹார மூர்த்திக்கு நடத்தப்பட்ட பூஜை வழக்கமான ஒன்றுதான்" என்றார்.

கோவிலில் இருந்து வெளியே வந்த நித்யானந்தாவிடம் செய்தியாளர்கள் பேச முயன்றனர். அவர் பேச மறுத்துவிட்டார். "சுவாமிஜி தரிசனத்திற்காகதான் வந்துள்ளார்" எனக் கூறியபடியே சிஷ்யர்கள், செய்தியாளர்களை அவர் அருகில் நெருங்கவிடவில்லை. நித்யானந்தாவைக் காண பக்தர்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எதற்கும் அசைந்து கொடுக்காத நித்தி, தன் டிரேடு மார்க் புன்னயையுடன், பக்தர்களை நோக்கி கையசைத்தபடியே கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!