வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (18/03/2018)

கடைசி தொடர்பு:05:00 (18/03/2018)

எடப்பாடியும், மு.க.ஸ்டாலினும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார்கள்..! டி.ராஜேந்தர் தாக்கு

தமிழகத்தில் எடப்பாடி அரசுக்கும் ஸ்டாலினுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. இவர்களின் அரசியல் சுயலாபத்திற்காக மக்களை பகடைகாயாக மாற்றுகிறார்கள் என்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

                       

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் இலட்சிய தி.மு.க மற்றும் சிம்பு ரசிகர் மன்றத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மற்றும் சிம்பு ரசிகர் மன்றத்தை டி.ராஜேந்தர் திறந்து வைத்தார். 

                       

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீத்தேன், மற்றும் ஷேல்கேஸ் உள்ளிட்ட திட்டங்களால் டெல்டா பகுதிகள் அனைத்தும் பாலைவனமாகும் நிலை ஏற்படும்..மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான பலவிஷயங்களில் ஈடுபடுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இந்த திட்டங்களை மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. ஸ்டாலினுக்கும் ஆளுங்கட்சியினருக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது. இதனால் தான் ஸ்டாலின் சட்டசபைக்கு கல்லூரிக்கு செல்வது போல் சென்றுவிட்டு உடனே வெளியே வருகிறார். எனக்கு எப்போதும் தலைவர் கருணாநிதிதான்.

அதனால்தான் கருணாநிதி அழைத்தால் எனது கட்சியை தாய் கழகமான தி.மு.கவுடன் இணைத்துக் கொள்வோம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது நானே கட்சியை நடத்துவது என முடிவு செய்து விட்டேன். டி.டி.வி.தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றகழகம் திராவிடத்தையும், அண்ணாவையும் மறந்துள்ளர்கள். அதனால் அவர்கள் எப்படி அ.தி.மு.கவிற்கு மாற்று என்றும் அ.தி.மு.கவைக் கைப்பற்றுவோம் என்றும் கூறமுடியும். ஈ.பி.எஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. அவர்கள் ஜெயலலிதாவின் செல்வாக்கிலேயே உள்ளனர்'

அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, 'அவர் எனக்கு நல்ல நண்பர் என்றும் இரட்டை இலை சின்னம் கிடைக்க  எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே முக்கியமானவராக இருந்தவர். அவர் உண்மையை சொன்னார் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்மூலம் அ.தி.மு.க மத்திய அரசின் பிணாமியாக செயல்படுவது உறுதியாகிவிட்டது. 

                          

தற்போது காவேரி பிரச்சனைக்காக எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொல்லும் ஸ்டாலின் மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்தபோது இலங்கை தமிழர் படுகொலையின்போது ராஜினாமா செய்யாதது ஏன்? மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற பகல் கனவு காண்கிறார். ஆனால் அது நடக்காது இவரின் உண்மை முகம் மக்களுக்கு தெரியும் என்று ஸ்டாலினை கடுமையாக சாடினார். அதேபோல் கட்சியைப் பலபடுத்த சூறாவளியாய் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளப்போகிறேன்' என்று தெரிவித்தார்.