வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (18/03/2018)

கடைசி தொடர்பு:13:10 (18/03/2018)

’ஒரு புழுவை போன்று என்னை பார்த்தார்கள்’ -நாஞ்சில் சம்பத் கவலை

இனி இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று சொல்லி, அரசியலில் இருந்தும் டிடிவி தினகரன் அணியில் இருந்தும் விலகிய நாஞ்சில் சம்பத், 'தினகரனைச் சிகரத்தில் கொண்டு செல்ல என் சிறகுகளை அசைத்தேன்' என்று ட்விட் செய்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

தி.மு.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகளில் இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலாவுக்கு தனது ஆதரவை அளித்து, டிடிவி தினகரன் அணியில் இணைந்து, அவரை ஆதரித்து பல்வேறு மேடைகளில் பேசி வந்தார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில், டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திராவிடம் என்ற சொல் இல்லை, டிடிவி தினகரன் திராவிடத்தைப் புறக்கணிப்பதாக  சொல்லி, அவரது அணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். 

நாஞ்சில் சம்பத்

இவரின், இந்த அறிவிப்பு வருத்தம் அளிப்பதாகத் தனது ஆதங்கத்தைத் தினகரன் வெளியிட்டிருந்த நிலையில், நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், ' இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக  அவர் பழி வாங்கப்பட்டப்  பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுசெல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதைப் போன்றுதான் என்னைப் பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை. அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்' என்று மனம் வருந்திப் பதிவிட்டுள்ளார்.