'தகப்பன் இல்லாத வீடு போல இருக்கிறது தமிழகம்!' - சீமான் குற்றச்சாட்டு

"தமிழகம் தலைவன் இல்லாத நாடு போலவும், தகப்பன் இல்லாத வீடு போலவும் காட்சி அளிக்கிறது. ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முடிவில் உள்ளது. மற்ற கோவில்களைப் போல் அல்ல. இந்தக் கோவிலின் வழிபாட்டு முறையே வேறு. இதை கையகப்படுத்தும் முயற்சியை  அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு தலைமையின் கீழ் ஆட்சி தற்போது நடைபெறவில்லை. ஓ.பி.எஸ் தனியாகவும், இ.பி.எஸ். தனியாகவும் ஆட்சி செய்கிறார்கள் என்பது அவர்களது ஆதரவாளர்கள்  சொல்லித்தான் தெரிகிறது.  தமிழகம் தற்போது தலைவன் இல்லாத நாடாகவும், தகப்பன் இல்லாத வீடாகவும் உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 35 நாட்களுக்கும் மேல் கிராமத்தில்  போராட்டம் நடத்தி வரும் மக்களை அரசு  கண்டுகொள்ளவில்லை. இந்த மக்களை அரசு சார்பில் யாராவது சந்தித்தார்களா..? இடிந்தகரையில் 2 ஆண்டாக போராடிய போது அரசு செவிமடுக்கவில்லையே. போராடிய ஒவ்வொருவர் மீதும் நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டதே தவிர வேறு என்ன செய்தது? ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுக்கின்றன. போராடுகின்ற மக்களை அரசு கண்டு கொள்கிறதா? 

சீமான்

ஆற்றினை கூறு போட்டு மணல் அள்ள அனுமதி, கிரானைட் குவாரிக்கு அனுமதி,  மீத்தேன் எடுப்பது போன்ற மக்களை முழுமையாகப் பாதிக்கும் திட்டங்களைத்தான் அரசு ஊக்குவித்து வருகிறது. தஞ்சை பாலைவனமாக மாறி வருகிறது. நிலத்தையும் உயிரையும்  பாதிக்கும்  எண்ணெய் கிணறுகளை மேலும் பல இடங்களில் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. காரணம் கேட்டால், வளர்ச்சி என்கிறார்கள். நீரும் சோறும் இல்லாத நிலை மக்களுக்கு ஏற்படுத்தி தருவதுதான் வளர்ச்சியா? இன்னும் 5 ஆண்டுகளில் அரபு நாடுகள் போலத்தான் தமிழகம் காட்சி அளிக்கும். தண்ணீர் இல்லாத மாநிலமாக கூட அறிவிக்கப்படும்.

இத்திட்டங்களை எதிர்த்து போராட்டத்தின் மூலம் மக்கள் குரல் எழுப்பும் போது அவர்களை தீவிரவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என கட்டம் கட்டிவிடுகிறார்கள். மக்கள் மீது காவல்துறையை விட்டு தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைப்பார்களே தவிர அந்தப் பிரச்னைக்கான தீர்வை எந்த ஒரு அரசும் கூறியதில்லை" என்றார்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை சந்தித்து பேசினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!