வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (18/03/2018)

கடைசி தொடர்பு:13:45 (18/03/2018)

435 சிறப்புப்பள்ளிகளை அரசே நடத்துவதாகச் சொல்வதா?- தமிழக பட்ஜெட் குறித்து மாற்றுத்திறனாளிகள் கோபம்!

பட்ஜெட்

சமூகத்தில் உரியபடி கவனிக்கப்படாத, பராமரிக்கப்படாத பிரிவினரில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பார்வையில், தமிழக அரசின் பட்ஜெட் எப்படி இருக்கிறது என்பது பதிவுசெய்யப்படவேண்டியதாகும். 

சட்டமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்ட 2018-2019 நிதிநிலை அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு, 545.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதில்,“ தசைச் சிதைவு மற்று பக்கவாதத்தால் கை,கால் பாதிக்கப்பட்ட 2,000 நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் 13 கோடி ரூபாய் செலவில் வழங்க அனுமதி அளிக்கப்படும். முந்தைய ஆண்டில் 1,000 பயனாளிகளுக்கு முதலில் இவ்வண்டிகள் வழங்கப்பட்டன. மேலும் 2,000 மாற்றுத்திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாய் செலவில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க, விளிம்பு உதவித்தொகை 10,000 ரூபாயிலிரு¨து 25,000 ரூபாயாக உயந்த்தப்படும். தற்போது ஆண்டிற்கு 1,000 பயனாளிகளுக்கு உதவி வழங்கப்படுவதை இரு மடங்காக உயர்த்தி 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அறிவிப்பு ஏதும் இல்லை.

இதைப் பற்றி மாற்றித்திறனாளிகள் தரப்பில் என்ன நினைக்கிறார்கள்? அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்புராஜனிடம் கேட்டோம். புதிய மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல அம்சங்களை மாநில அரசு கண்டுகொள்ளவே இல்லை என குறைகளைக் கொட்டுகிறார். 

" மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான புதிய சட்டமானது 2016-ல் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளபடி மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக ஒரு நிதியத்தை உருவாக்கவேண்டும். அதாவது, நிரந்தரமான வைப்புநிதியாக வைக்கப்படும் இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். அதன்படி, தமிழகத்தில் உருவாக்கப்படவுள்ள நிதியத்திற்கு ரூ. 10 கோடிதான், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசாங்கத்தின் கணக்குப்படியே 11.5 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். உண்மையில் இப்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். இந்தநிலையில், ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து, என்ன நலத்திட்டத்தைச் செயல்படுத்தமுடியும்? 

புதிய சட்டத்தின்படி பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்றபடி அமைக்கவேண்டும். 5 ஆண்டுகளில் இதைச் செய்துமுடிக்கவேண்டும். குறைந்தபட்சம், தலைநகர் சென்னையில் இருக்கும் தலைமைச்செயலகம், எழிலகம் கட்டடம் போன்றவற்றிலாவது இந்த வசதியைச் செய்துள்ளார்களா என்றால் இல்லை. தமிழக அரசு, அவற்றைப் பற்றியெல்லாம் வாய் திறக்க மறுக்கிறது. 

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, தரவுகளைத் தொகுக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. எனக்குத் தெரிந்து 20 ஆண்டுகளாக இதைச் சொல்லிவருகிறார்கள். ஆனால், இதற்குத் தேவையான நிதியை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. தற்போதும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு, நிதியை ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. 

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றால் அதற்கென தனியாக நிதியை ஒதுக்குகிறார்கள். நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய  வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பன்னோக்கு அடையாள அட்டையை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். ஆனால் உரிய நிதியை ஒதுக்கவில்லை. 

மாற்றுத்திறனாளிகள் பட்ஜெட்மாற்றுத்திறனாளிகளுக்கான 435 சிறப்புப் பள்ளிகள் அனைத்தையும் ஏதோ தமிழக அரசு நேரடியாக நடத்துவதுபோல நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருப்பது, தவறானது. பார்வையற்றோர், காதுகேளாதோருக்கு மாநிலம் முழுவதும் சுமார் 25 சிறப்புப் பள்ளிகளை மட்டுமே அரசு நேரடியாக நடத்துகிறது. மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்காக ஒரு மையத்தை மட்டுமே அரசு நேரடியாக நடத்துகிறது. மற்றவை அனைத்தும் தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. அவர்களுக்கு உறுதியான, நிரந்தரமான எந்த உதவியையும் தமிழக அரசு செய்யவில்லை என்பதே உண்மை. தவறான தகவல்களை பட்ஜெட் அறிக்கையில் தந்து தமிழக அரசு ஏமாற்ற முயற்சிக்கிறது. இவற்றை அரசே முழுமையாக நடத்தவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. 

உயரவளர்ச்சி குறைபாடு உடையவர்களுக்கான குறைந்தபட்ச உதவித்தொகை, அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வீடு, கழிப்பிட வசதியை ஏற்படுத்தித்தரவேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பராமரிப்புத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி அவர்களுக்கும் பராமரிப்புத் தொகை அளிக்கவேண்டும். மாவட்ட மனநலப் பாதுகாப்பு மையத்தை அரசே நடத்தவேண்டும். மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கான பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்க அரசு ஆணையிடவேண்டும். 

உயர்கல்வித் துறையில் ஒரு திட்டத்துக்கே (மடிக்கணினி வழங்குவதற்கு) 758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. (அதை வேண்டாம் என்று கூறவில்லை) ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு அதைவிடக் குறைவுதான் (545.21 கோடி ரூபாய்). மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஆண்டைவிட பெயரளவிற்கு ஒரு சில திட்டங்களுக்கு ஒன்றிரண்டு கோடி ரூபாய்களை மட்டும் உயர்த்தி வழங்கிவிட்டு மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் வகையிலேயே உள்ளது” என வருத்தப்படுகிறார், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் நம்பிராஜன்.  


டிரெண்டிங் @ விகடன்