வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/03/2018)

கடைசி தொடர்பு:13:50 (18/03/2018)

தாயை கொடூரமான முறையில் கொலை செய்து போலீஸில் சரணடைந்த மகன்!

தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க மறுத்த தாயை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன், அந்தத் தலையை எடுத்துக்கொண்டு கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று காலை சரணடைந்தார். 

கொலை


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள மறவம்பட்டி  ஊரை சேர்ந்தவர் ஆனந்த்(23 ). இவரது தந்தையின் பெயர் தங்கராஜ், தாயார் ராணி. இவருக்கு நான்கு மகன்கள். இதில் மூத்தவர் ஆனந்த். 12 வருடங்களுக்கு முன்பு ராணி தனது கணவரான தங்கராஜை கொலை செய்ததாக, மழையூர் காவல்நிலையத்தில் வழக்காகி, போதிய சாட்சியங்கள் இல்லை என்ற காரணங்களால் ராணி விடுதலை ஆகி இருக்கிறார்.

பிள்ளைகள் நால்வரும் பெரியவர்களான பிறகு பாகப்பிரிவினை பற்றி  அடிக்கடி அம்மாவுக்கும் பிள்ளைக்கும் தகராறு எழுவது  வழக்கமாக இருந்திருக்கிறது. ”தினமும் அவர்கள் வீட்டில் ராணிக்கும் ஆனந்த்துக்கும் சொத்துக்குறித்த சண்டைதான் நடக்கும். இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பதுதானே என்று அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுபோலதான் நேற்று இரவும் இருவருக்கும் சண்டை பெரிய அளவில் நடந்தது. 'என்னோட உயிரே போனாலும் என் சொத்துல சல்லிக்காசு கூட உனக்குத் தரமாட்டேன்டானு அந்தம்மா திட்டுச்சு. ஒருகட்டத்துக்கு மேல தகறாறு  பெரிதாகி, ’சொத்து வேணும்னு ஒத்தக்கால்ல நின்னேன்னு வெச்சுக்க. ஒங்கப்பனை கொன்ன மாதிரி ஒன்னையும் கொன்னுடுவேன்னு அந்தம்மா சொல்லுச்சு. இன்னிக்குக் காலையிலே  அம்மாவோட தலைமுடியைப் பிடிச்சு  தரதரன்னு வீட்டுக்கு வெளில இழுத்துட்டு வந்தவன் கையில வெச்சிருந்த அரிவாளால் தலையை வெட்டியிருக்கான். தெருவுல அவங்கம்மா தலையில்லாத முண்டமா கிடந்தாங்க. தன்னோட அப்பாவை அம்மாவே கொன்ற ஆத்திரம், சொத்துக்காக தன்னையும் கொல்வேனு சொன்ன கடுப்பு, என எல்லாமுமா சேர்ந்து அம்மாவை ஆனந்த் கொல்ல காரணமாயிடுச்சு"என்று  படபடப்புடன் விவரித்தார்கள் அந்தத் தெருவைச் சேர்ந்தவர்கள். 

தனது அம்மாவின் தலையை ஒரு பையில் போட்டுக்கொண்டு நேராக கறம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஆனந்த், அங்கிருந்த போலீசாரிடம் ரத்தம் உறைந்த நிலையில் இருந்த தனது தாயின் தலையைக்காட்டி,   'தனக்கு சேரவேண்டிய சொத்துக்கள பிரித்துக் கொடுக்க தடையாக இருந்த தனது தாயாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டேன். இது எங்கம்மாவோட தலை. முண்டம் மறவன்பட்டில கெடக்கு" என்று எந்வித பதட்டமும் இல்லாமல் கூற, போலீசார் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனந்திடம் மேற்கொண்டு தகவலை கேட்டறிந்த போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.  மறவன்பட்டி  கிராமம் மழையூர் காவல்நிலைய லிமிட்டுக்குள் வருவதால், கறம்பக்குடி போலீசார் அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள்.உடனடியாக  மறவன்பட்டிக்கு விரைந்த மழையூர் போலீசார், கழுத்து வெட்டப்பட்டு தெருவில் கிடக்கும் ராணியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்பிவைத்தனர். வெட்டிய தலையை தனியாக எடுத்துக்கொண்டு வந்து,  காவல்நிலையத்தில் ஆனந்த் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.