Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“என்னையும் அதுபோல் படிக்க வைப்பீர்களா?” - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 2

ஹாசினி

Chennai: 

ருவோரை எல்லாம் வரவேற்று வாழவைக்கும் சிறப்புமிக்க பெருநகரமாம் சென்னையின் ஒருபகுதியாகத் திகழ்வது போரூர். இந்தப் பகுதியில் அடங்கிய மதனந்தபுரம் ஏரியாவில் உள்ளது மாதா தெரு. இங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான், நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த அந்தச் சிறுமியும் வசித்து வந்தாள். 

ஆறு வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் ஒரு ஃபோர்ஷனில் ஶ்ரீனிவாஸ் பாபு தன் மனைவி ஶ்ரீதேவியுடனும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும் குடியேறுகிறார். ஶ்ரீனிவாஸ் பாபுவுக்கு, சோழிங்கநல்லூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை; ஶ்ரீதேவி பள்ளி ஆசிரியை. இந்தத் தம்பதியின் மூத்த மகள்தான் ஹாசினி. அழகான அந்தப் பெயர்தான், கடந்த ஒருவருடக் காலத்தில் தமிழகம் முழுவதும் ஏன், இந்திய அளவிலும் எல்லோராலும் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் எனலாம். ஹாசினி என்ற பெயருக்குத் தமிழில் ‘புன்னகை புரிபவள்’, ‘பாராட்டப்படுபவள்’, ‘ஒளி பொருந்தியவள்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே ஹாசினி, புன்னகையுடன் கூடிய குழந்தையாகத்தான் வலம் வந்திருக்கிறாள் நிறைய கனவுகளுடன். 

ஹாசினி போன்ற ஓவியம்

“கனவுகள் எல்லாம் நனவாகும்... நிறைய காயங்களுக்குப் பிறகு” என்றார் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். உண்மைதான். நிறைய கனவுகள், காயங்கள் மூலமாகத்தானே நிஜமாகியிருக்கின்றன. சாதாரணக் கனவு கண்டால் அது சாத்தியமானதாக இருக்காது; அந்தக் கனவு சத்தியமானதாக இருக்க வேண்டும். ஹாசினியின் கனவுகூட லட்சியம் நிறைந்ததாகத்தான் இருந்திருக்கிறது. அது, அவளின் நிஜமான கனவு என்றுகூடச் சொல்லலாம். 

ஹாசினி ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன் தாய்-தந்தையுடன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போகிறாள். அங்கு வெள்ளை நிறச் சட்டையுடனும், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடனும் வலம்வரும் மருத்துவர்களைப் பார்க்கிறாள். அவர்களைப் பார்த்தவுடன் இவளுக்கும் தன் மனதில் ஏதோ ஓர் ஆனந்தம் பிறக்கிறது. சிகிச்சை முடிந்து வெளியே வரும் ஹாசினியின் குடும்பத்தினர், மீண்டும் வீட்டுக்குப் பயணமாகிறார்கள். 

எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஹாசினி... அவரிடம், “அப்பா... நாம் ஹாஸ்பிட்டலில் பார்த்தோமே, நிறைய டாக்டர்ஸை. அதுபோலத்தான் பெரியவளானபிறகு நானும் ஆகப்போகிறேன். டாக்டர் ஆவதுதான் என்னுடைய  கனவு. டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வதுதான் என்னுடைய ஆசை. என்னையும் அதுபோல் படிக்க வைப்பீர்களா?” என்று கேட்கிறாள். ஹாசினியின் ஆசையைக்கேட்டு, அப்படியே பூரித்துப் போகிறார் அவளின் தந்தை. “உன் விருப்பம்மா.. நீ கேட்டது அனைத்தையும் செய்கிறேன். டாக்டராவதுதான் உன் விருப்பம் என்றால், அதையும் நான் நிறைவேற்றுகிறேன்” என்று சொல்லி அவளைக் கட்டியணைத்து, அன்பு முத்தம் தருகிறார். 

ஹாசினி போன்ற ஓவியம்நாள்கள் நகர்கின்றன... ஹாசினியின் தந்தையான பாபுவுக்கு ஆந்திராவில் அவருடைய பூர்வீகச் சொத்து இருக்கிறது. அண்ணன், தம்பி சகிதமாக உள்ள சொத்து அது. ஒருநாள் ஹாசினியின் தந்தை, தன் தம்பியிடம், “என் மகள் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்கு நிறைய செலவு ஆகும். அதற்காக நம் பூர்வீகச் சொத்தில் உள்ள என் பாகத்தைப் பின்னாடி விற்கவேண்டி வரலாம்” என்று கோரிக்கை வைக்கிறார்.

அதற்கு ஹாசினியின் சித்தப்பாவோ, “இதுக்கு ஏன் கவலைப்படுற அண்ணே? ஹாசினி நம் உயிர். அவளைவிட வேற சொத்து என்ன இருக்கிறது? அவ, ஆசைப்பட்டப்படியே டாக்டருக்குப் படிக்கட்டும். அந்தச் சொத்து மட்டுமல்லாது, என்னால் முடிந்த உதவியையும் அவளுக்கு நான் செய்யுறேன்” என்று தன் சகோதரனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். 

ஹாசினியின் தந்தை மனதில் இருக்கும் பாரம் நீங்குகிறது. இதைக்கேட்ட மகிழ்ச்சியில் மீண்டும் ஹாசினியை அணைத்து முத்தமிடுகிறார் பாபு. ஆனால், அந்தக் கனவுகூடத் தூக்கத்தில் வந்து கலைந்துபோகும் கனவாகவே இருந்திருக்கிறது ஹாசினிக்கு. அவளுக்கு மட்டுமல்ல... அவள் அப்பாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவளே உயிருடன் இல்லாதபோது, அவளின் கனவு மட்டும் எப்படி ஜெயிக்கும்? ஆம், அந்தக் கனவு நிறைவேறுவதற்குள், அவள் காற்றோடு கலந்துவிட்டாள். 

ஹாசினிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு மட்டுமல்லாது, இன்னும் பல கனவுகளும்,  திறமைகளும் ஒருங்கே இருந்துள்ளன. ஆடிப் பாடியிருக்கிறாள்; கூடி மகிழ்ந்திருக்கிறாள்; ஓடி விளையாடியிருக்கிறாள்.

இப்படியான தருணத்தில் அவள், அப்பாவிடம் செய்த சேட்டைகள் யாவை... அவரிடம் வேறு என்னென்னவெல்லாம் கேட்டாள் என்பதை வரும் தொடரில் பார்ப்போம்...

ஹாசினி சிறகடிக்கும்...
 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement