சைபர் கிரைம் கண்காணிப்பு வளையத்தில் ’சென்னை டிரெக்கிங் கிளப்’ பீட்டர்!

யாரைக் கேட்டாலும், ’’ரொம்ப நல்லவர். அமைதியானவர். நேர்மையாக, யாருக்கும் தெரியாமல் போகிற போக்கில் உதவி செய்யக்கூடிய குணம் படைத்தவர் பீட்டர்…’’ என்கிறார்கள். தற்போது பீட்டர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

பீட்டர்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17ஐ தொட்டிருக்கிறது. அதில் பெரும்பாலோனோர், சென்னை டிரெக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர்கள். மீதம் உள்ளோர் ஈரோட்டைச் சேர்ந்த டிரெக்கிங் கிளப்பில் இருந்து வந்தவர்கள். இந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், வரும் 22-ம் தேதி சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் என்றால், குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு மட்டுமே வனத்துறையின் அனுமதி இருக்கும் போது, குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு இவர்கள் எப்படி டிரெக்கிங் சென்றார்கள்? என்ற கேள்வியை மையப்படுத்தி விசாரணை செய்த வனத்துறை, வனவர் ஒருவரை சஸ்பெண்ட் செய்தது மட்டுமல்லாமல், ஈரோடு குழுவினை அழைத்து வந்த பிரபு என்ற வழிகாட்டியை, வனச் சட்டம் 21/d உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சென்னை டிரெக்கிங் கிளப் பீட்டர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் பேசிய போது, ‘’பீட்டர் வான் கெய்த் என்பவர் சென்னை டிரெக்கிங் கிளப்பை பல வருடங்களாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இது ஒரு விபத்து என தனது முகநூலில் கடைசியாக  பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். நடைபெற்றது ஒரு சட்டவிரோத டிரெக்கிங் என அவர்களுக்கு தெரியாதா என்பது புரியவில்லை. இதனால், முகநூல் நிறுவனத்தை தொடர்புகொண்டு பீட்டர் மற்றும் அவரை பின் தொடரும் நண்பர்கள் பற்றிய முழு விவரத்தை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது பீட்டர் மற்றும் அவரது நண்பர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறார்கள்’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!