வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (18/03/2018)

கடைசி தொடர்பு:20:30 (18/03/2018)

`புயலால் கடலுக்குச் செல்லாத தஞ்சை மீனவர்கள்!’ - கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு

புயலுக்கான அறிகுறிகள் நிலவியதால் தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளார்கள்.

மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், சேதுபாவாச்சத்திரம், கணேசபுரம், கொள்ளுக்காடு, மந்திரிப்பட்டினம், ராவுத்தன்பாளையம், உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், இங்குள்ள கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். கடல் மீன்களுக்கு அதிகமான விலை கிடைக்கக்கூடிய காலம் இது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக வளர்ப்பு மீன்களின் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதாலேயே, கடல் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த பற்றாக்குறையை கடல் மீன்கள்தான் நிறைவு செய்யும். இதனால் கடல் மீன்களுக்கு வழக்கத்தைவிட அதிகமான விலை கிடைக்கும். இப்பகுதியில் புயல் அறிகுறி இருந்ததால் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதனால் இங்குள்ள பத்தாயிரத்திற்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. புயல் அபாயம் நீங்கியதால் தடை விலக்கி கொள்ளப்பட்டதால் தற்பொழுது மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கியிருக்கிறார்கள். நாலாயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் விசைப்படகுகளில் அவர்கள் மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கியுள்ளனர்.