வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (18/03/2018)

கடைசி தொடர்பு:07:55 (19/03/2018)

`இது மகாபாரதம் வெர்ஷன் 2.0!’ - காங்கிரஸ் மாநாட்டில் பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “பா.ஜ.கவினர் தமிழர்களிடம், அழகான உங்கள் மொழியை மாற்றுங்கள் என்பார்கள்” என்றார்.  

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலர் இந்த மாநாட்டில் பேசினர்.  

மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸின் பங்கு உள்ளது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஆனாலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். பா.ஜ.க. ஒரு அமைப்பின் குரல். காங்கிரஸ் ஒட்டுமொத்த நாட்டின் குரல். கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் மக்கள் எங்களை கைவிட்டனர். இதை நான் மகிழ்ச்சியாக சொல்லவில்லை. காங்கிரஸ் உண்மையை வெளிக்கொண்டு வரும். மோடி ஒவ்வொரு முறையும் பிரச்னைகளை திசை திருப்புகிறார்.

சோனியா காந்தி

பா.ஜ.கவினர்,  இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களிடம், இது உங்கள் இடம் இல்லை என்பார்கள். தமிழர்களிடம் அழகான உங்களின் மொழியை மாற்றுங்கள் என்பார்கள். வடகிழக்கு மாநில மக்களிடம், உங்களின் உணவுப் பழக்கம் பிடிக்கவில்லை என்பார்கள். பத்திரிகையாளர் கவுரி லாங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோரிடம், கேள்வி கேட்டால், கொல்லப்படுவீர்கள் என்பார்கள். நேர்மையாக தொழில் செய்பவர்களை செய்யவிடாமல், ஊழல் அதிகாரிகளைக் கொண்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்வார்கள். 

நீங்கள் வங்கியில் இருந்து 33,000 கோடி ரூபாயயை திருடிக்கொண்டு போகலாம். பா.ஜ.க. உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். நிதி அமைச்சர் அமைதியாகி விடுவார். காரணம், அவரது மகள் இது போன்ற முதலாளிகளுக்காகவே வேலை செய்கிறார். பா.ஜ.க. அச்சத்தை பரப்புகிறது. பத்திரிகையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியாயம் வேண்டும் என மக்களிடம் செல்கிறார்கள். காங்கிரஸுக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் வேறுபாடு உண்டு. காங்கிரஸ் தேசிய நிறுவனங்களை ஆதரிக்கும், மதிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ், தாங்கள் மட்டும் தான் ஒரே நிறுவனம் என செயல்படும். 

காங்கிரஸ் மாநாடு

மக்கள், கொலை குற்றம்சாட்ட பட்ட ஒருவரை பா.ஜ.க. கட்சி தலைவராக ஏற்று கொள்வார்கள். ஆனால் அப்படி ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் மக்கள் கங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட உயர்ந்த எண்ணம். காங்கிரஸிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும். இங்கு தலைவர்களுக்கும் கட்சி பணி செய்பவர்களுக்கும் இடையே ஒரு சுவர் உள்ளது. எனது முதல் பணி அந்த சுவற்றை உடைப்பது தான். சீனியர் தலைவர்களின் ஆலோசனைப்படி அன்பு கொண்டு அந்த சுவர் உடைக்கப்படும். 

காங்கிரஸ் கட்சி நாட்டை முன்நோக்கி எடுத்துச் செல்லும். ஆனாலும் நாம், மனிதர்கள். தவறுகள் நடக்கும். ஆனால் மோடி தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக்கொள்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், குருஷேத்திர களத்தில் பேர் நடந்தது. கொளரவர்கள் அதிக சக்தியுடன், அதிகாரத்துக்காக போரிடுபவர்களாக இருந்தனர். பாண்டவர்கள் அமைதியாக உண்மைக்காக போராடுபவர்களாக இருந்தனர். அதேபோன்று தற்போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தை கைப்பற்ற போராடும் கௌரவர்களை போல; ஆனால், காங்கிரஸ் பாண்டவர்களை போல உண்மைக்காக போராடும்’ என்றார்.