வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (18/03/2018)

கடைசி தொடர்பு:22:00 (18/03/2018)

`சென்னை செல்லும் குடிநீர் கால்வாயில் கலக்கும் கழிவுநீர்!’- நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் ஆட்சியர்?

சென்னை நகர குடிநீர்த்  தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விப்படுகிறது. 

குடிநீரில் கலக்கும் சாக்கடை

இந்த தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பயன்படுகிறது. இங்கிருந்து கால்வாய் மூலம் சென்னை புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். இந்த கால்வாய் பூண்டியிலிருந்து காக்களூர், ஈக்காடு வழியாக சென்னை செல்லும். இந்த கால்வாயில் திருவள்ளூர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் ஆகியவை சென்னை செல்லும் குடிநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால் குடிநீர் மாசுபடுகிறது. இது குறித்து புல்லரம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், சென்னையில் இருப்பவர்களூம் மனிதர்கள்தானே இந்த தண்ணீரை எப்படி குடிப்பார்கள் குடிநீரில் கழிவு நீர் கலப்பது எந்த வகையில் நியாயம்? என்கிறார். இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில் குமரனிடம் கேட்டதற்கு, ``இதுபோன்றதொரு புகார் வந்தநிலையில், அந்த கழிவுநீர் கால்வாயை 4 நாள்களுக்கு முன்னர் அடைத்து விட்டோம். தற்போது அந்த அடைப்பை யாரேனும் எடுத்துவிட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரிக்கிறேன் என்றும், அப்படி திறக்கப்பட்டிருந்தால் அதை சரி செய்துவிடுகிறோம்’’ என்று முடித்துக் கொண்டார். தண்ணீரில்தான் எளிதில் நோய் பரவும். சென்னை மக்களுக்கு நோய் தொற்று ஏற்படால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.