மூன்று மாதங்களுக்குப் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்த கருணாநிதி!

தி.மு.க.  தலைமை  அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அழைத்து வரப்பாட்டார். 

கடந்த 2016 டிசம்பர் மாதம் 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. தொடர் சிகிச்சை காரணமாக தற்போது சென்னை கோபாலபுரத்திலுள்ள, தனது இல்லத்திலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், கடந்த பத்து மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தை விட்டு வெளியே செல்வதும் முழுவதுமாகக் குறைந்திருந்தது. இதற்கிடையே மு.க.தமிழரசுவின் பேரனைப் பார்த்து கருணாநிதி சிரிக்கும் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வைரலானது. திடீரென சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்குக் கடந்த அக்டோபர் 19-ம் தேதி சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். 

அதையடுத்து, மு.க.முத்து மகள் வழிப் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் சென்னைக் கோபாலபுரத்தில்திருமணத்தை கருணாநிதி கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடத்தி வைத்தார். மேலும், அன்றைய தினமே கோபாலபுரம் இல்லத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்.

இந்தநிலையில், அவர் இன்று தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் மூன்று மாதத்துக்கு பின்னர் தற்போது அவர் அண்ணா அறிவாலயம் வந்தார்.அவரை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி, பின்னர் கோபாலபுரம் இத்துக்குத்  திரும்பினார். ஓய்விலிருக்கும் கருணாநிதி, கடந்த ஓராண்டில் அண்ணா அறிவாலயம் வருவது இது இரண்டாவது  முறையாகும். கருணாநிதியின் வருகை, தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!