தமிழகத்திற்கு அ.தி.மு.க. துரோகம் இழைத்துவிடக் கூடாது! சி.பி.எம். வலியுறுத்தல் | CPI(M) urges admk mps to vote against BJP in no confidence motion

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (18/03/2018)

தமிழகத்திற்கு அ.தி.மு.க. துரோகம் இழைத்துவிடக் கூடாது! சி.பி.எம். வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால்  பா.ஜ.க அரசுக்கு எதிராக  அ.தி.மு.க. உள்பட தமிழக எம்.பிக்கள்  வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது..

சி.பி.எம்.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில் அதை முழுமையாக ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலக் குழு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் " மத்தியில் அதிகாரக் குவிப்பு, மாநில உரிமைகளை நசுக்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை  வளைப்பது என எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொண்டுவரும் பா.ஜ.க. அரசுக்கு வலுவான எதிர்ப்பினை காட்ட வேண்டும்.

தமிழகத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகிறோம். 6 வார கால அவகாசத்திற்குள் மேலாண்மை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மத்திய அரசு நாடகமாடி வருகிறது. தமிழகக் கட்சிகளை சந்திப்பதைக் கூட பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார். தமிழக மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழக எம்.பிக்கள் ஒரே குரலில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அதிக எம்.பிக்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க., நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்காவிட்டால் அது தமிழக மக்களுக்குச் செய்கிற துரோகமாகவே அமைந்திடும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க