'அவங்க முன்னோர்கள் என்ன தியாகிகளா... ' - கொந்தளிக்கும் ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர்!

ஐ என் டி யூ சி மாநிலத் தலைவர்

ரஜினியும், கமலும் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றவே அரசியலுக்கு வருகின்றனர் என தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி (INTUC) மாநிலத் தலைவர் காளன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி (INTUC) 241-வது மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் மின்வாரியத் தொழிலாளர்களின் உதிய உயர்வு ஒப்பந்தம், உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் காலத்தில் நிவாரணத் தொகை வழங்குதல், கட்டுமானப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. 

அப்போது ஐ.என்.டி.யூ.சி மாநிலத் தலைவர் காளன் பேசுகையில், “தொழிலாளர்களுக்கு விரோதமாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மோடி அரசாங்கம் ஊழலை ஒழிக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. மாறாக, வெளிநாட்டு முதலாளிகளை ஆதரித்து அவர்களுக்கு பணத்தை வாரி வழங்குகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இன்னும் 2 வார காலம் அவகாசம் உள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் போராட்டத்தின் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியம் அமையவிருப்பதை தடுக்கும் நோக்கத்தில் அரசியல் செய்து வருகின்றனர். தமிழக அரசாங்கமோ செயல்பாடற்று கிடக்கிறது. அரசாங்கத்தை இயக்க இங்கு ஆள் இல்லை. எம்.எல்.ஏக்களை தக்க வைக்கவே இங்கு போட்டி நடக்கிறது. இதற்கிடையே புதிது புதிதாக பலர் அரசியலுக்கு வருகிறார்கள். சம்பாதிச்ச வரைக்கும் போதும்னு வீட்ல உட்காந்து ஜாலியாக சாப்பிட்டுக்கு இருக்காம ரஜினி, கமலுக்கு எதுக்கு அரசியல். அவங்க முன்னோர்கள் என்ன தியாகிகளா!... நாட்டுக்காக ஏதாவது உழைச்சிருக்காங்களா!... கருப்புப் பணத்தை வெள்ளையா மாத்தணும். அதுக்காகத் தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வர்றாங்க” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!