வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (19/03/2018)

கடைசி தொடர்பு:01:30 (19/03/2018)

தீவனப் பண்ணையில் பற்றி எரிந்த தீ...! - புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை  புறநகர் மறுப்பிணி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கால்நடை தீவனப் பண்ணையின் ஒரு பகுதியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. கிட்டதட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள புற்கள் பற்றி எரிந்து சாம்பலானது. 
 

தீ விபத்து

புதுக்கோட்டை நகருக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவில் மறுப்பிணி சாலையில் அமைந்திருக்கும் 60-ஏக்கர் பரப்பளவுள்ள  பண்ணையில் மாடுகள் தீவனத்திற்காக புற்கள் வளர்க்கப்படுகிறது. இந்தப்புற்கள் மிகக் குறைவான விலைக்கு கால்நடை வளர்ப்போருக்கு நகராட்சி நிர்வாகம் கொடுத்து வருகிறது. இதன்காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், விவசாயிகள் தினமும் 100,150- கட்டுகள் என மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். போதிய மழை, மேய்ச்சல் பகுதிகளும் இல்லாமல் போனதன் காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு பசியாற்ற இந்தத் பண்ணையையே நம்பி இருந்தார்கள். 

தீ விபத்து

இதுதவிர, வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி, கிராமப் பகுதிகளில் விற்று காசு பார்த்தார்கள். இந்தப்பண்ணையை பராமரிப்பதற்கு பணியாளர்களையும், தினமும் புல்லுக்கட்டை விற்பதற்கு அலுவலர்களையும் நகராட்சி நிர்வாகம் நியமித்திருந்தது. அவர்கள் வேலை நேரம் காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை. இந்த நிலையில்தான் இன்று மதியம் அவர்களெல்லாம் புறப்பட்டுப் போன பிறகு, பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்திருக்கிறது. குடியிருப்புகள் எதுவும் அருகில் இல்லாததால் உடனடியாக தீ விபத்து தகவலை சொல்லமுடியாமல் போயிருக்கிறது. தீ பற்றிய இடத்தில் காய்ந்தப் புற்கள் பெருமளவில் இருந்ததால்,மளமளவென தீ பரவியது. இதனால் அந்தப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்ததால், அந்தவழியேச் சென்றவர்கள் விபரீதத்தை உணர்ந்து, தீயணைப்புத்துறைக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கும்   தகவல் கூறி இருக்கிறார்கள். இதன்பின், உடனடியாக விரைந்துவந்த இரண்டுத் தரப்பினரும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். 

சம்பவ இடத்திலிருந்த நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் கூறும்போது, "இந்தப்பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பண்ணைக்குத் தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளோம். கிட்டதட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள புற்கள் சேதமடைந்துள்ளது. தீயில் நான்கு தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதில் யாருக்கும் எந்தவித தீக்காயமோ, பாதிப்புகளோ இல்லை" என்றார். குரங்கணி தீவிபத்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள சூழலில், இந்தத் தீவிபத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.