வெளியிடப்பட்ட நேரம்: 02:50 (19/03/2018)

கடைசி தொடர்பு:02:50 (19/03/2018)

'வீட்டுக்கு இரண்டு நொச்சி மரக்கன்றுகள்' - கரூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி!

கரூர் மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டில் வீட்டுக்கு இரண்டு வீதம் என ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

மரக்கன்றுகள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கொடையூர், வெஞ்சமாங்கூடலூர் மேற்கு மற்றும் கிழக்கு செங்காடு போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமாரிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காற்று மாசுபடுதல், கொசு உற்பத்தி கட்டுப்படுத்துதல், அதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல், அலர்ஜி போன்றவைகளை கட்டுப்படுத்தும் நல்ல மூலிகையாக நொச்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை  கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 50,000 வீடுகளுக்கு முதற்கட்டமாக வீட்டுக்கு இரண்டு நொச்சி மரக்கன்று வழங்கப்படவுள்ளன. இதற்காக, 8 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.88 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் பதியம் வைத்து பராமாரிப்பு செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

இதுவரை 35,500 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில் ஒரு கிலோமீட்டருக்கு 200 மரங்கள் வீதம் 100 கிலோ மீட்டருக்கு 20,000 மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை 18,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்யவும், கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக உயிர் வேலிகள் அமைத்து பாதுகாக்கவும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் அரசு புறம்போக்கு இடங்கள், அரசு அலுவலகங்களை சார்ந்த காலியிடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளில் ஒன்றுகூட விடுபடாமல் அனைத்து மரங்களையும் நல்ல முறையில் பராமாரித்து வளர்க்க சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பொறுப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.