வயிற்றைக் கவனியுங்கள் ... ஆரோக்கியம் வளம் பெறும்

எத்தனைப் படித்தாலும், கேட்டாலும் நாம் புரிந்து கொள்வதே இல்லை. பட்டால்தான் புரிகிறது. ஆம், வயிற்றைச் சரியாகக் கவனித்தாலே போதும், முக்கால்வாசி நோய்களை வரவிடாமல் தடுத்து விடலாம் என்பதை நாம் கண்டுகொள்வதேயில்லை. எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும்? இப்படி எத்தனையோ விஷயங்களை அறிந்து கொள்ளாமல், வயிற்றைக் கண்டபடி உபயோகித்து நோய்களின் கிடங்காகவே மாற்றி விடுகிறோம்.

ஆரோக்கியம்

அதிலும் பெண்கள் படுமோசம். கணவர், குழந்தைகள் சாப்பிட்ட உணவுகள் வீணாகிறதே என்ற காரணத்துக்காகவே அடிக்கடி உண்டு, வயிற்றை குப்பைத் தொட்டியைப்போல மாற்றி விடுகிறார்கள். இதனால் விளையும் ஆபத்தோ அதிகமானது. பசி வந்தபோது, பக்குவமான உணவுகளை, உங்களின் உழைப்புக்கேற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியம்.

உணவு

இதை மறந்து விட்டு, நேரமாகி விட்டது என்பதற்காகவே சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். நேரமில்லை என்ற காரணத்துக்காகக் கண்டதை வெளியில் வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டோம். சுவைக்காக குறைவாகவோ, அதிகமாகவோ உண்ண ஆரம்பித்து விட்டோம். இவையெல்லாம் சேர்ந்துதான் இன்று எங்கு நோக்கினாலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், அல்சர், உடல் பருமனால் உண்டாகும் பிரச்னைகள் எனத் தென்படுகின்றது. அதனால் மருந்துகளின் தேவைகள் அதிகமாகிவிட்டது. இதை தவிர்க்க, எளிதில் கழிவாக மாறாத உணவை உண்ணவே உண்ணாதீர்கள். அவசர அவசரமாக உண்ணாதீர்கள். வெளியிடங்களில் சுவைக்காக உண்ணவே உண்ணாதீர்கள். சுகாதாரமற்ற உணவை மறுத்துவிடுங்கள். எச்சில் சுரக்க, நன்கு மென்று, ருசித்து உண்ணுங்கள். சுருக்கமாக சொன்னால் உணவை மிச்சம் வைக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் மிச்சம் வைத்து நொறுங்கத் தின்றால் உங்களை நோய்கள் அண்டவே அண்டாது. சரியா?  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!