வெளியிடப்பட்ட நேரம்: 04:50 (19/03/2018)

கடைசி தொடர்பு:13:12 (19/03/2018)

'மற்ற கட்சிகளைப்போல் கோஷ்டிப் பூசல் இருக்கக் கூடாது" - அலெர்ட் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்!

மக்கள் நீதி மய்யம்

‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து அரசியலில் இறங்கிய கமல்ஹாசன், பொது மக்களையும், நிர்வாகிகளையும் சந்திக்க முதலாவதாக சுற்றுப்பயணம் மேற்கொண்டது பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டம் தான். மார்ச் 10, 11 ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த வரவேற்பை அப்படியே தங்களுக்குச் சாதகமக்கிக் கொள்ள வேண்டுமென ஈரோடு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.   

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், “நம்முடைய கட்சியில் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து இணைகிறார்கள். ஒருசிலர் எங்களுக்கு என்ன செய்வீங்க! பணம் கொடுப்பீங்களா?..ன்னு எல்லாம் கேட்குறாங்க. வீடு வீடாகச் சென்று நாங்கள் நல்லது செய்வோம் நம்புங்கள் என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு குழுவாக, ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் கோஷ்டிப் பூசல் இருக்கக்கூடாது. தலைமைக்கு எந்தப் பிரச்சினையும் போகக் கூடாது. அது நம்ம தலைவருக்கு தான் மனவருத்தத்தைக் கொடுக்கும். நம்மால் தலைவருக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது. ‘கமல்ஹாசன் என்னும் நான்’ என்ற வார்த்தை ஒலிக்கும் வரை நாம் ஓயக்கூடாது” என்று பேசினர்.  

மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சந்திரன் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்துல 5 லட்சம் பேரை உறுப்பினராக்க வேண்டுமென தலைமையில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கைக்காக 2 மொபைல் வேன்கள் மாவட்டம் முழுவதும் சுற்றி வருகிறது. திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு முன்னதாக 3 லட்சம் பேரை நாம் உறுப்பினராக்க வேண்டும். திருச்சியில் நடக்கும் மாநாட்டில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வோம் என தலைவரிடம் சொன்னோம். அதற்கே அவர் ஒருமாதிரி பார்த்தார். எனவே, 5 ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் நாம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். அப்பதான் நமக்கு மரியாதை கிடைக்கும். கட்சியின் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக திருச்சி மாநாட்டில் அதெல்லாம் அறிவிக்கப்படும். மேலும், கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கான உறுப்பினர் அடையாள அட்டையை ஒரு விழா நடத்தி, அதன் மூலமாகத் தர இருக்கிறார்கள்” என்றார்.