வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (19/03/2018)

கடைசி தொடர்பு:15:36 (09/07/2018)

ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து ரேக்ளா ரேஸ்! புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த கலக்கல் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வருடாவருடம் நடத்தப்படும் குதிரை மற்றும் மாட்டுப் பந்தயப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. இதற்காக ஒட்டப்பட்ட  அறிவிப்பு போஸ்டர்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.


ரேக்ளா ரேஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தின் தனிப்பெரும் அடையாளங்களாக சில விஷயங்கள் பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்னிலை வகிப்பது ஜல்லிக்கட்டும் அதுசார்ந்த மஞ்சுவிரட்டு, வட(ம்)மாடு, குழுமாடு போட்டிகள். அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை ரேக்ளா ரேஸ். இதிலும் இரண்டு வகையான ரேஸ் உண்டு. ஒன்று, மாட்டுவண்டி ரேஸ்.மற்றொன்று குதிரை வண்டி ரேஸ். இதில்,மாட்டுவண்டி ரேஸில் மட்டும் ஒத்தை மாட்டு வண்டி போட்டி, இரட்டை மாட்டு வண்டி போட்டி என்று தனி வகைகள் உள்ளன. குதிரைகளுக்கு மட்டும்  எப்போதும் ஒற்றைக்குதிரை வண்டி போட்டிதான். பங்குனி  மாதம் பிறந்து விட்டாலே, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.

ஆங்கில மாதத்தில் மே மாதம் வரை இந்தப் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அதற்கான அறிவிப்பு போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் போன்றவற்றை இப்போதே கிராமப்புறப் பகுதிகளில் ஒட்டியும் பொருத்தியும் விடுவார்கள். இந்தப் போட்டிகளை 80 வருடங்களாகத் தொடர்ந்து நடத்திவரும் கிராம பஞ்சாயத்தார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறார்கள். பரிசுகளும் பிரமாண்டமாக இருக்கும். முதல் பரிசாக ரூபாய் 50,000 வரை ரொக்கமாகக் கொடுக்கும் புகழ்பெற்ற குதிரை, மாட்டு வண்டி போட்டிகளும் இங்கு நடைபெறும். இதில், பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு (கன்றுக்குட்டி) ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டாலே, அதற்கு ரொக்கமாக வழங்கப்படும் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 5 லட்சம் வரை இருக்கும். இதில், பெரிய குதிரை, நடு குதிரை, பூஞ்சிட்டுக் குதிரை போட்டிகளும் சேர்த்து நடத்தப்பட்டால், அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும். பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? அசந்துபோய் விடுவீர்கள். கிட்டதட்ட 10,00000 (பத்து லட்சம்) ரூபாய்.


ரேக்ளா ரேஸ் பரிசு

காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் இந்தப்  போட்டிகள் மாலை ஆறுமணி வரை தொடர்ந்து நடைபெறும். பட்டுக்கோட்டை,பேராவூரணி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தினையாகுடி, அறந்தாங்கி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் பந்தய மாடுகளும் குதிரைகளும் இதில் கலந்துகொள்ளும். போட்டியில் பந்தய தூரம்  பிரிவுகளுக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, பெரிய மாடுகளுக்குப்  போக வர எட்டு கிலோ மீட்டர், நடு மாடுகளுக்குப் போக வர ஏழு கிலோ மீட்டர், அதுபோல், கரிச்சான் மாடுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் என்று தூரம் இருக்கும். இதேதான் குதிரைகளுக்கும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமில்லாத சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண்பதற்கென்று சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் திரண்டு இருப்பது இந்தப் போட்டியின் சிறப்புகளில் ஒன்று.