“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி | Story of a girl kid who was freed from slavery

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (19/03/2018)

கடைசி தொடர்பு:16:11 (19/03/2018)

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி

வள்ளி

ள்ளி... படப்பையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. அன்று காலை, தான் தங்கியிருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு முயல்குட்டிபோல அங்கும் இங்கும் துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கிறாள். தம்பி சாமிநாதனையும் தங்கை ரேணுகாவையும் பள்ளிக்குக் கிளப்பவேண்டிய பொறுப்பு அந்தச் சிறுமிக்கு. சில நிமிடங்களில் மற்ற மாணவர்களோடு தம்பியையும் தங்கையையும் வேனில் அனுப்பிவிட்டு நம்மை நோக்கி வருகிறாள். 

“சாரி அண்ணா, நேத்து நீங்க போனில் பேசும்போது எனக்கு என்ன பேசறதுனு புரியலை. நேத்துதான் முதல் தடவையா எனக்குன்னு போன் வந்துச்சு. அதுவரை யாருகிட்டேயுமே பேசினதில்லே” எனப் புன்னகைக்கிறாள். பள்ளிச் சீருடையும் புத்தகப் பையுமாக வந்து நிற்கும் வள்ளியைப் பார்க்கும்போது, 'இந்தச் சிறு வயதில் ஏன் இப்படியொரு கதி நேர்ந்தது?' என நினைத்து மனதில் சுமை கூடியது. 

கடலூருக்கு அருகே உள்ள நெடுமாறம் என்ற ஊரைச் சேர்ந்தவள் வள்ளி. வறுமை காரணமாக கொத்தடிமையாகத் திருவள்ளூருக்கு வரவழைக்கப்பட்ட குடும்பம். 10 வருடங்களுக்கும் மேலாக ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு மீட்டது. ஆனாலும், தாயை இழந்தும் தந்தையைப் பிரிந்தும், உடன் பிறந்தவர்களை மறந்தும், ஊர் பேர் தெரியாத ஓரிடத்தில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறாள் இந்தச் சின்னஞ்சிறு பேதை.

“அப்போ, எனக்கு என்ன வயசுனு சரியா தெரியாது. அம்மா, அப்பா, தம்பி சாமிநாதன், சின்னராசு, தங்கச்சி ரேணுகா, சத்யா என எல்லாரும் ரைஸ் மில்லில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம்னா என்னன்னே தெரியாது. வீட்டுக்கு நான்தான் மூத்த பொண்ணு. அந்த ரைஸ் மில்லுலதான் பொறந்தேனாம். அங்கேயே வளந்ததால், என்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சுட்டிருந்தேன். 'நீ படிச்சு பெரிய ஆளா வரணும். டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும்'னு அம்மா அடிக்கடி சொல்லிட்டே இருக்கும். 'இவ படிக்க போயிட்டா, உன் மத்த பசங்களை யாரு பாத்துப்பா?'னு மில்லு ஓனரு என்னை வெளியிலேயே அனுப்பலை. அங்கே இருந்தவரை தெனம் தெனம் கஷ்டம்தான். சொல்ற வேலையைச் சரியா செய்யலேன்னா அடி வெளுத்துருவார். பயந்து பயந்து வாழ்ந்துட்டிருந்தோம். அப்போதான் அரசாங்கத்திலிருந்து அதிகாரிங்க வந்து, எங்களைக் கூட்டிட்டு வந்தாங்க'' என வள்ளி சொல்ல, அந்த நாள்களை மனதுக்குள் கற்பனை செய்யவே வலிக்கிறது. 

''வெளியில் வந்த கொஞ்ச நாளில் நந்தினி பாப்பா பொறந்தா. அவள் பொறந்ததுமே அம்மா செத்துப்போயிடுச்சு. தெனம் தெனம் பாப்பா அழுதுட்டே இருக்கும். அப்பா, அவளுக்குப் பால்கூட வாங்கிக்கொடுக்க மாட்டார். குறுணை அரிசியைக் காய்ச்சிக் கொடுப்பேன். சாமி, ரேணுகா, சத்யா, சின்ராசு என நாலு பேருக்குமே வெவரம் தெரியாத வயசு. நந்தினி கைப்புள்ள. அந்த நேரத்துல எங்களைப் பத்திரமா பாத்துக்கவேண்டிய அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு. நந்தினிக்கு உடம்பு சரி இல்லாமப் போயிருச்சு. ஐ.சி.யூ-ல வெச்சிருந்தாங்க. அவளையும் மத்த நாலு பேரையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் இந்த ஹோமுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. இங்கே நான், சாமி, ரேணுகா மட்டும்தான் இருக்கோம். சத்யா, சின்ராசு, நந்தினி வேற ஒரு ஹோம்ல இருக்காங்க” பரிதவிப்பும் ஏக்கமுமாகப் பேசுகிறாள் வள்ளி. 

சிறுமி வள்ளி

“போன வருஷத்திலிருந்து நானும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சிட்டேண்ணா. இப்போ, நல்லாவே எழுத்துக்கூட்டி படிக்கப் பழகிட்டேன். ஏபிசிடி கத்துக்கிட்டேன். இங்கிலீஷ் வாசிக்கவும் எழுதவும் கத்துக்கிட்டேன். என்னோடு இருக்கும் தம்பி, தங்கச்சியும் நல்லா படிக்கிறாங்க. ஆனா, மற்ற மூணு தம்பி தங்கச்சிகளைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியலை. ஒரு தடவை ஆசைப்பட்டு கேட்டதுக்கு, அந்த ஹோமுக்கு கூட்டிட்டுப் போனாங்க. என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் என்னை யாருன்னே தெரியலை. என்னைப் பார்த்து பயந்து, பக்கத்துல வரவே இல்லே. எனக்கு அழுகையா வந்துடுச்சுண்ணா” 

கண்ணீர் சிந்தும் வள்ளிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. 'கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்' என்றதும், “அண்ணா, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என் அப்பாவைப் பார்க்கணும். ஏன்ப்பா எங்களை விட்டுட்டுப் போனேனு கேட்கணும். என் தங்கச்சிக்கே என்னைத் தெரியலை. நீ எங்ககூட இருந்திருந்தா, இப்படி ஆகியிருக்குமானு கேட்கணும்'' என்கிறாள். 

துயர் மிகுந்த அவள் வார்த்தைகளுக்கான மருந்து, தந்தைதான். தன் தவறை உணர்ந்து வள்ளியின் தந்தை எங்கிருந்தாலும் வெகு விரைவில் வந்து சேரட்டும். 


டிரெண்டிங் @ விகடன்