` என் முடியைக் காணோம்' - போலீஸைக் கலங்கடித்த ஆசாமி

``என் தலையில் முடியைக் காணோம். போலீஸ் இழுத்ததால்தான் என் முடியெல்லாம் போய் வழுக்கையாகிவிட்டேன்” என்று போதை ஆசாமி சொன்ன புகாரால் நடுங்கிவிட்டனர் புதுச்சேரி போலீஸார்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் ஆசாமி ஒருவர் குடித்துவிட்டுப் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாகப் போலீஸ் நிலையத்துக்கு தகவல் சென்றது. அதையடுத்து அங்கு உடனே சென்ற ஒதியஞ்சாலை போலீஸ் வழுக்கைத் தலையுடன் இருந்த அந்த ஆசாமியை வளைத்துப் பிடித்தது. அப்போது, “என்னுடைய 15 பவுன் தங்கச் செயின், தங்க மோதிரம் மற்றும் குருமாத்து போன்றவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்” என்று கூறியிருக்கிறார். போதையில் உளறிக்கொண்டிருந்த அந்த ஆசாமியை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார்.

அப்போது, அந்த ஆசாமி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், “உங்களைப் போலத்தான் எனக்கும் தலையில் அடர்த்தியாக முடி இருந்தது. இந்தப் போலீஸ்காரர்கள்தான் என் முடிகளைப் பிடுங்கிவிட்டனர். அதனால்தான் என் தலை வழுக்கையாகிவிட்டது” என்று புகார் கூற தூக்கிவாரிப் போட்டிருக்கிறது போலீஸூக்கு. அதைத் தொடர்ந்து அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உளறுகிறார் என்று போலீஸ் தெரிவித்ததும், அந்த ஆசாமிக்குப் போதை தெளியும் ஊசி போட்டனர் மருத்துவர்கள். போதை தெளிந்ததும் அந்த ஆசாமியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மூர்த்தி என்பதும், புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதையடுத்து அவரது வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரின் மனைவி, ``குடித்துவிட்டால் இவர் இப்படித்தான் பேசுவார் சார்” என்று கூறி மன்னிப்புக் கேட்டார். “தினுசு தினுசா எப்படித்தான் இப்படியெல்லாம் கெளம்பி வர்றானுங்களோ” என்று தலையில் அடித்துக்கொண்ட போலீஸ், போதை ஆசாமி மூர்த்தியைக் கைது செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!