`ரமணா பட பாணியில் உங்களைக் கண்காணிக்கிறார் ஸ்டாலின்' - தி.மு.க-வினரைக் கிலிப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி

நீங்கள் சொல்வதை அனைத்தும் நம்பாமல் அது சரிதானா எனத் தெரிந்துகொள்வதற்கு ரமணா படத்தில் வருவதுபோல் இருபது வழக்கறிஞர்களைத் தமிழகம் முழுவதும்  உளவுப்பிரிவு போல்  நியமித்துள்ளார் ஸ்டாலின் என்று தி.மு.க-வினருக்கு கிலியை ஏற்படுத்தினார் ஆர்.எஸ்.பாரதி.

ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி

தஞ்சை, திருவாரூர், நாகை  மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வழக்கறிஞர்கள் அணிக்கான ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில்  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.எஸ்.பாரதி.  தி.மு.க-வில் பல்வேறு அணிகள் இருந்தாலும் வக்கீல் அணிதான் மிகவும் வலுவாக உள்ளது. இந்த அணியினர் கட்சியைத் தூக்கி நிறுத்துவதோடு தி.மு.க. மீது வீணாகப் போடப்படும் வழக்குகளிலும் இந்த அணிதான் வெற்றியைப் பெற்றுத்தருகிறார்கள்.

செயல் தலைவர் ஸ்டாலின் கட்சியைப் பலப்படுத்துவதற்காக  மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தை நடத்திவருகிறார். இதில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்களிடம் அடுத்து வர இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் தளபதி  என்னென்ன கேள்விகளைக் கேட்கிறார் எனத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் தயார்படுத்திக்கொண்டு வருகிறார்கள். இனிமேல் அப்படி செய்யாதீர்கள்.  நீங்கள் சொல்வதை அனைத்தும் நம்பாமல் அது சரிதானா எனத் தெரிந்து கொள்வதற்கு ரமணா படத்தில் வருவதுபோல் இருபது வழக்கறிஞர்களைத் தமிழகம் முழுவதும்  உளவுப்பிரிவு போல்  நியமித்துள்ளார் ஸ்டாலின். நீங்க என்ன செய்தாலும், பேசினாலும் அவர்கள் மூலம் தளபதிக்குத் தெரிந்துவிடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அதற்காக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. 'அடுத்து தி.மு.க-தான் ஆட்சி அமைக்கும். இதை நானே சொன்னேன் என்று ஸ்டாலினிடம் சொல்லுங்கள்' என என்னிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது'' எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!