”கெளசல்யா பத்தி India's Forbidden Love இயக்கும்போது என் சாதி பற்றி நூறு பேராவது கேட்டிருப்பாங்க!” - இயக்குநர் சாதனா | Interview with 'India's Forbidden Love' documentary director Sadhana Subramaniam

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (19/03/2018)

கடைசி தொடர்பு:14:09 (19/03/2018)

”கெளசல்யா பத்தி India's Forbidden Love இயக்கும்போது என் சாதி பற்றி நூறு பேராவது கேட்டிருப்பாங்க!” - இயக்குநர் சாதனா

கெளசல்யா

''யாரு தாய்னு போடறது? அன்னலட்சுமினு போடச் சொல்லுங்க” - உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் தீர்ப்பு அறிவித்தபோது, தொலைக்காட்சி செய்திகள் ’கெளசல்யாவின் தாய் விடுதலை’ என்று குறிப்பிட்டபோது, கெளசல்யா கூறிய இந்த வார்த்தைகளின் பின்னால் இருக்கும் தீர்க்கமான மனநிலையை, அந்த ஆவணப்படத்திலும் நம்மால் உணரமுடிகிறது. 

தமிழ்நாட்டையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கை, 'India's Forbidden Love' என்ற ஆவணப்படம் மூலம் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார், பத்திரிகையாளரும் இயக்குநருமான சாதனா சுப்ரமணியம். அல் ஜசீரா (Al Jazeera) என்ற சர்வதேச செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம், இந்தக் கொடூரமான சம்பவத்தில், கெளசல்யாவின் பக்கத்தை மட்டும் பதிவு செய்யவில்லை. அவரின் தாய் அன்னலட்சுமி, தம்பி கெளதம் மற்றும் கெளசல்யாவின் பாட்டி என அவர்களின் தரப்பையும் பதிவுசெய்திருக்கிறது. “இந்த ஆவணப்படத்துக்காக 12 மாதங்கள் கெளசல்யாவுடன் பயணித்தேன்” என்கிறார் சாதனா. லண்டனில் வசிக்கும் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். 

"இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. அப்படி இருக்கும்போது, இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை ஆவணப்படமாக்க முடிவெடுத்தது ஏன்?'' 

''ஆணவக் கொலைகளைப் பற்றி நான் ஆய்வு செய்ய ஆரம்பித்தபோது, இது உலக அளவில் நடந்துகொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டேன். இந்தியாவில் சாதி என்ற காரணத்துக்காக நடந்தால், மற்ற இடங்களில் மொழி, மதம் போன்ற வேறுபாடுகளால் கொல்லப்படுகிறார்கள். லண்டனிலும் இதுபோல நடக்குது. இதுபோன்ற கொடுமையான அனுபவங்களிலிருந்து மீண்டு வருகிறவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில், கெளசல்யா மிக முக்கியமானவர். அதனால்தான் அவர் வழக்கை ஆவணப்படுத்த நினைத்தேன்.'' 

''உங்கள் ஆவணப்படத்தில் கெளசல்யாவின் அம்மா, தம்பி மற்றும் பாட்டியின் பார்வைகளையும் பதிவு செய்திருப்பதன் நோக்கம் என்ன?'' 

''ஓர் ஆவணப்பட இயக்குநராகவும் பத்திரிகையாளராகவும் இந்த வழக்கு அல்லது சம்பவம் தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்க விரும்பவில்லை; அப்படி எடுக்கவும் கூடாது. அதனால்தான், அவர்களின் கருத்துகளையும் பதிவுசெய்ய விரும்பினேன். இதுகுறித்து கெளசல்யாவிடம் தெரிவித்தபோது, சற்று யோசித்தார். பிறகு, ஒப்புக்கொண்டார். கெளசல்யாவின் குடும்பத்தை அணுகுவதில் எனக்குச் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. அவங்க எப்படிப் பேசுவாங்க, என்னுடைய கேள்விகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்தேன். பிறகு, அவர்களிடம் பேசியபோது, அவர்களுக்கு நிறையச் சமூக அழுத்தங்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். இந்த ஆவணப்படத்துக்காக வேலை செய்துகொண்டிருக்கும்போதே, 'நீங்க யாருக்காகப் படம் எடுக்கறீங்க? நீங்க யார் தரப்பு எனக் கேட்டிருக்காங்க. சும்மா கடந்துபோகிறவர்களும், 'நீங்க என்ன சாதி?' என்று வெளிப்படையாகக் கேட்டனர். இந்தக் கேள்வியை இரண்டு தரப்பிலிருந்தும் குறைந்தது நூறு பேராவது கேட்டிருப்பார்கள்.'' 

கெளசல்யா


''படத்தைப் பார்த்துவிட்டு கெளசல்யா என்ன சொன்னார்?'' 

''தன் குடும்பத்தைப் பற்றி இதுவரை டிவியிலும் செய்தித்தாள்களிலுமே படித்துவந்திருக்கிறார் கெளசல்யா. நீண்ட நாள் கழித்து, அம்மா, தம்பி, பாட்டி பேசுவதைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். மற்றபடி, பெரிதாக எந்தக் கருத்தும் கூறவில்லை.'' 
 

கெளசல்யா

''கெளசல்யாவுடன் கிட்டத்தட்ட ஒரு வருடப் பயணம் குறித்து உங்களின் கருத்து என்ன?'' 

''உலக அளவில் ‘திருமணம்’ என்பது ஒரு குடும்பத்தின் சமூக அடையாளமாகத்தான் இருக்கிறது. நான் முன்பே சொன்னதுபோல, பல நாடுகளில் பணம், மொழி, மதம், சாதி ஆகியவற்றில் வேறுபாடு இருப்பவர்களுக்கிடையே இப்படியான கொலைகள் நடக்கின்றன. எந்த நாடாக இருந்தாலும் பெற்றோர் அனுமதியின்றி செய்யப்படும் திருமணங்கள், பல சிக்கல்களைச் சந்திக்கின்றன. என் பார்வையில், பழங்குடியினர்கள்தான் காதலையும் திருமணத்தையும் சரியான முறையில் அணுகுகின்றனர். நாம் எவ்வளவு மாடர்னாக ஆகியிருக்கிறோமோ, அந்த அளவுக்குக் காதல், உறவுகள், திருமணம் போன்ற விஷயங்களைச் சமூகத்துடன் பிணைத்திருக்கிறோம். அருணாசலப் பிரதேசம், நாகலாந்து, மேகாலயா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கிடையே தன் இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் இன்றளவும் இரு பாலினருக்கும் சமமாக உள்ளன. அருணாசலப் பிரதேசத்தின் ‘அபதானி’ (Apatani) என்ற பழங்குடியினத்திலும், மிசோரம் பகுதியின் ‘காஷி’ (Khasi) பழங்குடியினத்திலும் பெண்களுக்குத் தன் இணையைத் தேர்ந்தெடுக்கவும், பிடிக்காமல் போனால், அந்தத் திருமண வாழ்க்கையிலிருந்து விலகி, மற்றொரு இணையுடன் சேர்ந்து வாழவும் முழு சுதந்திரம் இருக்கிறது. இவர்கள் சமூகங்களில், பெரும்பாலும் பெண்கள்தான் குடும்பத்தை வழிநடத்திச் செல்கின்றனர். நம் தமிழ்நாட்டில்கூட முன்பு அத்தகைய சூழல் இருந்தது.'' 

''அப்படியானால், கெளசல்யா கூறுவதுபோல, ஆணவக்கொலையைத் தடுக்கச் சட்டம் கொண்டுவந்தால், இதற்குத் தீர்வு கிடைக்குமா?'' 

''இதற்காகப் புது சட்டம் தேவையில்லை. ஒரு மனிதர் கொல்லப்படுவது என்பது இந்தியாவில் குற்றம்தானே? அதன் நோக்கங்கள் வேறாக இருக்கும்பட்சத்தில், அதற்குச் சட்டத் திருத்தங்களும் வழிகாட்டுதல்களுமே தேவை. அதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்த ஆவணப்படம். ஆணவக் கொலை என்ற சமூக அநீதியைப் பற்றிய தெளிவை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு முயற்சி. இதனால், ஏதோ ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே.'' 

''உங்களைப் பற்றி...'' 

''என் அப்பா கோயம்புத்தூர்; அம்மா சேலத்தைச் சேர்ந்தவர். ஆனால், நான் படித்தது வளர்ந்தெல்லாம் மைசூர். பள்ளிப் படிப்பு முடிந்ததும், லண்டனில் ஃபிலிம் மேக்கிங் படித்தேன். போட்டோகிராபி, பயணம்தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். அண்டார்டிகாவுக்குப் பயணம் செய்த முதல் தமிழ்பெண் நான். ’India's Forbidden Love’ என்னுடைய முதல் ஆவணப்படம். தொடர்ந்து இதுபோன்ற சமூகச் சிக்கல்களை ஆவணப்படுத்த நினைக்கிறேன். அடுத்து, சிரியாவில் குழந்தைகள் எதிர்கொண்ட போரின் தாக்கம் குறித்து ஆவணப்படம் எடுப்பதற்காக ஆய்வுசெய்துகொண்டிருக்கிறேன்.'' 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்