வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (19/03/2018)

கடைசி தொடர்பு:14:34 (19/03/2018)

மாணவர்களுக்கு நீட்... மருத்துவர்களுக்கு 'கெட்-அவுட்...' மருத்துவத்தை கார்ப்பரேட் ஆக்குகிறதா மத்திய அரசு?

மருத்துவர்கள் போராட்டம்

மிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்குவதற்காக`நீட்' தேர்வை மத்திய அரசு எப்படிக் கொண்டுவந்ததோ... அதுபோல தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை கார்ப்பரேட் கைகளிடம் ஒப்படைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகக் காய்களை நகர்த்தி வருகிறது. நாட்டில், அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களைவிடச் சிறந்து விளங்கி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், தேவையான உபகரணங்கள் இருப்பது மட்டுமல்லாமல் திறமையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களும் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அதனால்தான் உறுப்பு மாற்று அறுவைகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. அந்த அளவுக்குத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பெயர் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இருக்காது என்று சொல்லப்படுகிறது. அப்படியே மருத்துவமனைகள் இருந்தாலும் மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் டாக்டர் ராமலிங்கம்இருக்க மாட்டார்கள். இதற்குக் காரணம், மருத்துவர்களுக்கான சட்ட மேற்படிப்பில் இருந்துவந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதன் நோக்கம், அரசு மருத்துவமனைகளை கார்ப்பரேட் கைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது மட்டும்தான். இன்று தமிழகத்தில் நடக்கும் பல பிரச்னைகளை நாம் மேலோட்டமாகக் கடந்து செல்வதுபோல இந்தப் பிரச்னையையும் நம்மால் மேலோட்டமாகக் கடந்து சென்றுவிட முடியாது. அப்படிக் கடந்துசென்றால் நாளை நேரடியாகப் பாதிப்படையப்போவது நமது தலைமுறையினர்தான்.

இதற்காகக் கடந்த சில மாதங்களாகப் பல போராட்டங்களை அரசு மருத்துவர்கள் கையிலெடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கத்திடம் பேசினோம். ``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை சிறந்து விளங்குவதற்குக் காரணம் தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் இருப்பதுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதுதான். ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் எனத் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மூன்று பிரிவுகளாக இருக்கின்றன. இதில் சுமார் 18,000-த்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவம் படித்து அரசு மருத்துவத் துறையில் சேர்ந்த பின்பு அங்கு பணியாற்றியபடியே பட்ட மேற்படிப்பு படித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களாக மாறுகிறார்கள். இதற்கு, இத்தனை ஆண்டுகளாகப் பட்ட மேற்படிப்பில் 50 சதவிகிதம் அரசு மருத்துவர்களுக்காக இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. டாக்டர் இந்துமதிதற்போது இருக்கும் 1,500 சீட்களில் பாதிக்கு பாதி `இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு'ச் சென்றுவிடும். மீதமுள்ள 750 இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்கும். இதுதான் நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் `தகுதித் தேர்வில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது' என்ற சட்டமானது, எங்களின் இட ஒதுக்கீட்டை மொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இதனால் வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் கார்ப்பரேட் கைகளுக்குச் சென்றுவிடும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி ஏழை மக்களே. இது ஒருபோதும் நடக்கக் கூடாது" என்றார்.

நோய்க் குறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் இந்துமதி, ``மருத்துவப் பட்டமேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்ட மசோதாவைக் (NMC bill) கைவிட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றச் சொல்லி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் 25 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் தேவையான அளவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இருந்துவருகிறார்கள். ஒவ்வொருவரும் இரண்டு வருடங்கள் கிராமப்புறங்களில் சேவை செய்தபிறகுதான் பட்ட மேற்படிப்பே படிக்க முடியும். மேற்படிப்பு படித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர் பெருமாள்மருத்துவர்கள் ஆனாலும், அவர்கள் அரசு மருத்துவத் துறையில்தான் பணி செய்கிறார்கள். ஆனால், தனியார் மருத்துவர்கள் எங்கள் இட ஒதுக்கீட்டில் படித்துவிட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுவார்கள். இதனால் வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகள் பின்தங்க வேண்டிய சூழல் ஏற்படும். இது, மிகவும் அபாயகரமானது" என்றார்.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டப் பொருளாளர் டாக்டர் பெருமாள் நம்மிடம் பேசியபோது, ``கடந்த 2017-ம் ஆண்டு இதற்கான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, `தகுதித் தேர்வு கட்டாயம். அதில் இட ஒதுக்கீடு கிடையாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் சென்றபோது, `உயர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பே சரியானது' என்று அதுவும் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இதற்காக  நாங்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய அளவிலான மருத்துவர்கள் ஒன்றிணைந்து இது தொடர்பாக மாநாடு நடத்தப்பட்டது. அதில், இந்தப் பிரச்னை பற்றி மற்ற மாநில அரசு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருந்தால் பல அரசியல்வாதிகள் சிபாரிசு செய்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. இதற்கு  எந்தவோர் அரசியல்வாதியும் குரல்கொடுக்க முன்வரவில்லை. ஏற்கெனவே அரசு மருத்துவர்களுக்கு மற்ற துறைகளைக் காட்டிலும் சம்பளம் மிகக்குறைவு. தனியார் மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் சில ஆண்டுகளில் சம்பாதிப்பதை, அரசு மருத்துவர்கள் சம்பாதிப்பதற்குக் குறைந்தது பல வருடங்களுக்கு மேல் ஆகும். அதற்குள், அவர்களுக்குப் பணி ஓய்வே வந்துவிடும். இந்தக் காரணத்தினாலேயே தற்போது படித்துவரும் மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு இல்லாவிட்டால், எந்த நம்பிக்கையில் மருத்துவம் படித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குப் பணியாற்ற வருவார்கள்? இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களே இல்லாமல் போய்விடுவார்கள். தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் மொத்தமாக அழிந்துவிடும்" என்றார்.

மருத்துவர்கள் போராட்டம்

`நீட்' தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கிய மத்திய அரசு, இப்போது அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் நீக்கித் தமிழகத்தை வஞ்சிக்கும் முயற்சியில் களமிறங்கிவிட்டது. 


டிரெண்டிங் @ விகடன்