`எங்கள் தீர்மானத்தை முதல்வர் கண்டுக்கல..!’ - வெளிநடப்பு செய்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள்

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர் ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ
 

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை நாளை (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. 

கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரை மூலம் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இன்று  தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ‘ரதயாத்திரை மூலம் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தோம். இதே கோரிக்கையை வலியுறித்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம்.

பா.ஜ.க, அ.தி.மு.க தவிர அனைத்து உறுப்பினர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால், பேரவைத் தலைவர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். விஸ்வ இந்து பரிஷத்தின் ரதயாத்திரை இன்னும் 10 மணிநேரத்தில் தமிழக எல்லையை அடையும். அந்த ரத யாத்திரையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே பல கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே, சட்ட ஒழுங்கு பிரச்சை ஏற்படாமல் இருக்க தமிழக அரசு ரதயாத்திரையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று பேசினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!