வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (19/03/2018)

கடைசி தொடர்பு:15:28 (19/03/2018)

அரசு மணல் குவாரி வழக்கில் அதிரடி தீர்ப்பு! - பொதுப்பணித்துறைக்கு `செக்' வைத்த நீதிபதி

மணல் குவாரி

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் மணல் குவாரிக்கு நடந்த இ-டெண்டரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

 சென்னை, ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த செந்தில்குமார் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, "செந்தில்குமார், பில்டிங் கான்ட்ராக்டராக உள்ளார். சென்னையில் நடுத்தர வர்க்கத்தினரின் வசதிக்காக மீடியம் பட்ஜெட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிவருகிறார். கட்டடப் பணிகளுக்குத் தேவையான மணலை, அரசு நடத்தும் குவாரிகளிலிருந்து வாங்கிவருகிறார். வெளிமார்க்கெட்டில் மணல் வாங்கினால் விலை அதிகம். கூடுதல் விலைக்கு மணல் வாங்கினால் வீடுகளின் விலையும் அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். 

 பொதுப்பணித்துறை நடத்தும் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலமாகத்தான் மணல் விற்பனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை என்ற இடத்தில் உள்ள ஆரணி ஆற்றில் புதியதாக மணல் குவாரி மற்றும் விற்பனை நிலையம் அமைக்க சில நாள்களுக்கு முன்பு இ-டெண்டர் விடப்பட்டது. அதில் பங்கேற்க முயன்றபோது, லாகின் செய்ய முடியவில்லை. இதனால், இ-டெண்டரில் தகுதிவாய்ந்தவர்களால் பங்கேற்க முடியவில்லை..எனவே, இ-டெண்டரில் தகுதிவாய்ந்தவர்களால் பங்கேற்க முடியவில்லை. எனவே, அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

 இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகினார். இறுதியில் ஊத்துக்கோட்டை மணல் குவாரிக்கு நடந்த இ-டெண்டரை ரத்து செய்துவிட்டு புதிய இ-டெண்டரை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

 வழக்கறிஞர் சுரேஷ்இதுகுறித்து வழக்கறிஞர் சுரேஷ் கூறுகையில், "ஊத்துக்கோட்டையில் அரசு அமைக்கவுள்ள மணல் குவாரிக்கான இ-டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. அதாவது, இ-டெண்டரில் குறிப்பிட்ட சிலர்தான் பங்கேற்றுள்ளனர். தகுதியான பலர் பங்கேற்க முடியாதளவுக்கு அது லாகின் செய்ய முடியாமல் சிலர் தடுத்துவிட்டனர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காகத்தான் இந்த முறைகேட்டை அவர்கள் செய்துள்ளனர். அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், இ-டெண்டர் ஓப்பன் செய்ய முடியாததற்கு பொதுப்பணி துறையைக் குற்றம் சுமத்த முடியாது. மேலும், அரசு இணையதளமான 'நிக்' என்ற வெப்சைட்டையும் மனுதாரர் குற்றம் சுமத்தியிருக்க வேண்டும் என்று வாதாடினார். அப்போது, எங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சிலருக்காகத்தான் இ-டெண்டரை லாகின் செய்ய முடியாமல் தடுத்துவிட்டதாக வாதாடிட்டோம். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இ-டெண்டர் நடந்ததில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, நடத்தப்பட்ட இ-டெண்டரை ரத்துசெய்துவிட்டு புதிய டெண்டர் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்" என்றார்.