நகைகளைத் திருப்பச் சென்றவர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி - மணப்புரம் கோல்டு நிறுவன மேலாளரின் கைவரிசை | Manapuram manager involved in scam

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (19/03/2018)

நகைகளைத் திருப்பச் சென்றவர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி - மணப்புரம் கோல்டு நிறுவன மேலாளரின் கைவரிசை

மணப்புரம் கோல்டு லோன் நிதி நிறுவனத்தில், படிக்காத மக்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. நகை அடகு வைக்க வந்தவர்களிடமிருந்து நூதனமான முறையில் ஏமாற்றிய மேலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மக்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவருகின்றனர்.

மணப்புரம் கோல்டு நிறுவன மேலாளர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது, மணப்புரம் கோல்டு நிதி நிறுவனம். இந்நிறுவனத்தில், தாதம்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த காளத்திபெருமாள் என்பவர்,  கிளை மேலாளராக உள்ளார். இவர், கடந்த 3 வருடமாக இந்த பொறுப்பில் உள்ளார். தற்போது, மார்ச் மாத கணக்கு முடிக்கப்பட வேண்டும் என்பதால், அலுவலக தணிக்கை நடைபெற்று வந்தது. தணிக்கையின்போது, போலி ஆவணங்கள் மற்றும் இல்லாத பெயர்களில் நகைகளை மாற்றி வைத்தும், தனித்தனியே பிரித்து வைத்தும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, நிதி நிறுவன மண்டல மேலாளர் ஜெகன், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், தணிக்கையின்போது 47,70,177 ரூபாயை காளத்திபெருமாள் கையாடல் செய்திருப்பதாகப் புகார் கொடுத்துள்ளார். இதன் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, காளத்தி பெருமாளைக் கைதுசெய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

விசாரணை செய்த போலீஸாரிடம் பேசினோம். "கஷ்டம் என்று அடகு வைக்க வரும் மக்களைக் குறிவைத்து, காளத்தி பெருமாள் ஏமாற்றியிருக்கிறார். அதிலும், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான் அவரது டார்கெட். ஒருவர் நகை அடகு வைத்துவிட்டு போனால், காளத்திபெருமாள் பத்து, இருபது நாள்கள் கழித்து அவரே சம்பந்தப்பட்டவரிடம், நகையின் தற்போது மதிப்புக் குறைவாக வைத்திருக்கிறீர்கள், அதிகமாக வைத்துக்கொடுங்கள் என்று சொன்னது போல ஒரு பேப்பரில் எழுதி, அந்த நகை அக்கவுண்ட் லிஸ்டில் சேர்த்துள்ளார். ஒரு கிராமுக்கு 300 ரூபாய் என்றால் 8 கிராமுக்கு 2,400. இது ஒரு நபரிடம் மட்டும். இதுபோல பலரின் அக்கவுன்ட்டுகளைத் திருத்தி, லட்சக்கணக்கில் ஏமாற்றியிருக்கிறார். ஆண்டு இறுதி என்பதால் ஆடிட்டிங் நடந்துள்ளது. ஆய்வுக்கு வந்த  அதிகாரிகள் கண்டுபிடித்துப் புகார் கொடுத்துள்ளனர். அதன் பெயரில், அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். முதல்கட்ட விசாரணையில், 150-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவரிடம் முழுமையாக விசாரித்தால், இதற்கு யார் யார் உடந்தையாகச் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்” என்றார்கள்