வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (19/03/2018)

கடைசி தொடர்பு:17:25 (19/03/2018)

`அதைத் தடுக்கவே இப்படிச் செய்கிறார்கள்' - அ.தி.மு.க எம்.பி-க்கள்மீது சமாஜ்வாதி பகீர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் கட்டளைப்படி அ.தி.மு.க அவையை முடக்குவதாக, சமாஜ்வாதி கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

ராம் கோபால் யாதவ்


நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்யவிடாமல், அ.தி.மு.க உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம்குறித்த அறிவிப்புகள் வெளியாகாததால்,  பட்ஜெட்மீது அக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. அதன் விளைவாக சமீபத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவதாக தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். 

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தர முன்வந்துள்ளன. 

இதையடுத்து, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்கும்’ என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க முன்னாள்  எம்.பி கே.சி.பழனிசாமி அதிரடியாகத் தெரிவித்தார். ஆனால், அவர் அப்படிப் பேசிய சில மணிநேரங்களில், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, அ.தி.மு.க, மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாக மறைமுகமாக விமர்சித்துப் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  ‘தமிழகத்தில் நடத்தும் நாடகம்போல ஆந்திராவில் நடத்த பிரதமர் மோடி அரசு முயற்சிசெய்கிறது’ என்று விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை நாடாளுமன்ற அவைகளைச் செயல்பட விடமாட்டோம் என அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

இதுகுறித்து பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம் கோபால் யாதவ், ‘மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில்தான் அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையை முடக்குகின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்யவிடாமல் அ.தி.மு.க வேண்டுமென்றே அவையை முடக்குகிறது’ என்று குற்றம் சாட்டினார்.
லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்தது கர்நாடக அமைச்சரவை. எங்களை லிங்காயத்துகள் என்றே அழைக்க வேண்டும், இந்துக்கள் என்றோ, வீர சைவர்கள் என்றோஅழைக்கக் கூடாது. இந்து மதச் சடங்குகளை, சம்பிரதாயங்களை நாங்கள் கடைப்பிடிக்க மாட்டோம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க